[X] Close

குற்றாலம் அருவிகளில் வெள்ளத்தால் குளிக்க தடை: சாரல் காலம் முன்கூட்டியே தொடங்கியது


coutralam-falls-ban

குற்றாலம் பிரதான அருவியில் நேற்றிரவு அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கொட்டியதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 29 May, 2018 11:47 am
  • அ+ அ-

குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த திடீர் கனமழையால் பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று மாலையில் வெள்ளம் கரைபுரண்டது. அருவிகளில் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.

தென்மேற்கு பருவமழைக் காலத்தில் கேரளாவில் பெய்யும் மழை மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து வந்து மெல்லிய சாரலாக பொழியும். இந்த காலகட்டத்தில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். மேகமூட்டம், அவ்வப்போது பன்னீர் தெளித்ததுபோல் பொழியும் சாரல் மழை, மூலிகைகளின் வாசத்துடன் வீசும் குளுமையான தென்றல் காற்று ஆகியவை மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இதனால், குற்றாலம் அருவிகளில் குளிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சாரல் சீஸன் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.

வழக்கமாக ஜூன் மாதத்தில் சாரல் மழை பெய்து, அருவிகளில் நீர் வரத்து ஏற்படும். இந்த ஆண்டு கடந்த 20 நாட்களாக குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று வீசியது. குற்றாலம் மலைப் பகுதியில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்தது.

இந்நிலையில், நேற்று காலையில் இருந்து குற்றாலம் மலைப் பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால், ஐந்தருவியில் மதியம் நீர் வரத்து ஏற்பட்டது. 

மாலையில் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை சற்று அதிகமாக இருந்தது. ஐந்தருவியில் திடீரென தண்ணீர் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அருவியில் ஆனந்தமாக நீராடினர். 

குற்றாலம் பிரதான அருவியில் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுந்தது. பிற்பகலில் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால், பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாலை 5 மணிக்குமேல் அருவியில் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.

 ஐந்தருவியிலும் அனைத்து கிளைகளிலும் வெள்ளம் கொட்டியது. அங்கும் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. இதுபோல், பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கும், குளிக்க தடை விதிக்கப்பட்டது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close