[X] Close

வீணாகும் 2-ம் உலகப்போர் விமான ஓடுதளம் காரைக்குடியில் ‘உடான்’ திட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படுமா?


airport-in-karaikudi

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 May, 2018 11:38 am
  • அ+ அ-

சிவகங்கை மாவட்டம், அருகில் உள்ள கானாடுகாத்தானில் இரண்டாம் உலகப் போரின்போது விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டன. இதனை பயன்படுத்தி மத்திய அரசின் ‘உடான்’ திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சிறு நகரங்களில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்தான் சேலத்திலிருந்து தற்போது விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஓசூர், நெய்வேலி, தஞ்சாவூர், வேலூர் போன்ற நகரங்களிலும் இதேபோன்ற சேவையைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

காரைக்குடி அருகே செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணை வளாகத்தில் இரண்டாம் உலகப் போரின்போது 1944-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதைகள் உள்ளன. தற்போது இந்த ஓடுபாதைகள் விமானப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படாமல் வீணாகக் கிடக்கிறது.

காரைக்குடி நகரில் உலகம் முழுவதும் தொழில் செய்யக்கூடிய தொழில் முதலீட்டாளர்கள் உள்ளனர். இங்கு ஏ-பிளஸ் தகுதி பெற்றுள்ள அழகப்பா பல்கலைக்கழகம், மத்திய மின் வேதியியல் ஆய்வகம் (சிக்ரி) உள்ளதால் ஆராய்ச்சி தொடர்பாகவும், கருத்தரங்குகளில் பங்கேற்பது தொடர்பாகவும் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்றனர்.

மேலும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை பயிற்சி மையம், மத்திய மி்ன் பகிர்மான நிலையம் மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. காரைக்குடியின் செட்டிநாடு கட்டிடக்கலை சார்ந்த அரண்மனைகள், வீடுகளைப் பார்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். காரைக்குடியில் திரைப்படம் மற்றும் டிவி தொடர் படப்பிடிப்புகள் அதிக அளவில் நடைபெற்றன. இதற்காக திரைத்துறையை சார்ந்த ஏராளமானோர் இங்கு வருகின்றனர்.

இவர்கள் மதுரை அல்லது திருச்சி விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடிக்கு வருகை தருகின்றனர். இதனால் வீண் அலைச்சல், பணம் மற்றும் நேரம் விரயமாகிறது. எனவே, மத்திய அரசின் உடான் திட்டத்தில் காரைக்குடி செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக காரைக்குடியைச் சேர்ந்த ஆதிஜெகன்னாதன், ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் கூறியதாவது:

ஏற்கெனவே மத்திய அரசு, காரைக்குடியை புராதன நகராக தேர்ந்தெடுத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டது. இங்கு சிறு மற்றும் பெரும் தொழில் முதலீட்டாளர்கள் உள்ளனர். காரைக்குடி பகுதிக்கு திரைப்படத்துறையினர் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். இவர்கள் விமான சேவைக்காக மதுரை, திருச்சி விமான நிலையங்களை பயன்படுத்துகின்றனர்.

இதற்கு மாற்றாக, காரைக்குடி செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணையில் இரண்டாம் உலகப் போரின்போது அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்தாலான விமான ஓடுதளம் தற்போதும் நல்ல நிலையில் உள்ளது. இந்த விமான ஓடுதளத்தை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பெற்று ‘உடான்’ திட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.

இதனால் காரைக்குடி நகரம் மேலும் பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெறும். இங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டு சிறிய ரக விமானங்களை இயக்கும்பட்சத்தில் மதுரை, திருச்சி விமான நிலையங்களில் நிலவும் நெரிசலையும் குறைக்கலாம் என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close