[X] Close

இரண்டரை ஆண்டுகள் கழித்து குப்பையில் வீசப்பட்டது; பல கோடி மதிப்பு மரகதலிங்கம் மீட்பு: வேட்டவலத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஆய்வு


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:09 am
  • அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட மரகதலிங்கம், திடீரென நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட இடத்தையும், கோயிலையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் நேற்று பார்வையிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் உள்ள ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோயிலில் கடந்த 2017 ஜன.8-ல் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கம் கொள்ளைபோனது. கோயில் சுவற்றில் துளையிட்டு கொள்ளை நடந்தது. மரகதலிங்கத்துடன் வெள்ளிப் பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து ஜமீன் மகேந்திர பந்தாரியார் கொடுத்த புகாரின் பேரில் வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

குப்பையில் கிடந்ததுஇதற்கிடையில், வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பைகுவியலில் கொள்ளைபோன மரகதலிங்கம் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக வேட்டவலம் போலீஸார் நேற்று முன்தினம் தெரிவித்தனர். ஜமீன் மகேந்திர பந்தாரியார் மற்றும் கோயில் குருக்கள் ஆகியோரிடம் விசாரித்ததில், அது கொள்ளையடிக்கப்பட்டட மரகதலிங்கம்தான் என்று உறுதியாக தெரிவித்ததாக போலீஸார் கூறினர். இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் மரகதலிங்கம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோயில் மற்றும் மரகதலிங்கம் கண்டெடுத்த இடத்தை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர், உள்ளூர் போலீஸார் மற்றும் ஜமீன் வளாகத்தில் இருந்த சிலரிடம் விசாரணை நடத்தினார்.

சுவற்றில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட மரகதலிங்கம், கோயில் அமைந்துள்ள வளாகத்தில் இருக்கும் குப்பையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வந்ததுஎப்படி என்ற கேள்வி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “சிலை கடத்தல்தடுப்புப் பிரிவு விசாரணை தீவிரமான நிலையில், மரகதலிங்கத்தை கொள்ளையடித்தவரை, தங்களது கண்காணிப்பு வளையத்துக்குள் அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டும். அதனால், விரைவில் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சம் கொள்ளையருக்கு ஏற்பட்டிருக்கும். அதன் எதிரொலியாக, குப்பையில் மரகதலிங்கத்தை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அவர் யார்? என்று கண்டறிந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவிக்க வேண்டும்” என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close