[X] Close

சென்னை, மதுரை காவல் ஆணையர் அலுவலகங்களில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் புகார்: சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:02 am
  • அ+ அ-

கமல்ஹாசனுக்கு எதிராக கருத்து கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை, மதுரை காவல் ஆணையர் அலுவலகங்களில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளனர்.

‘சுதந்திர இந்தியாவின் முதல்தீவிரவாதி இந்து’ என்று அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் நாக்கை அறுக்கும் நிலை உருவாகும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார் கொடுத்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யத்தின் சென்னை மத்திய வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பிரியதர்ஷினி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

“மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில், ‘கமல் ஹாசனின் நாக்கை அறுப்பேன். மக்கள் அனைவரும் அவரது நாக்கை அறுக்க வேண்டும்’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். அதிகாரத்தில் இருக்கும் நபர், பொறுப்பற்ற முறையில் தனிநபரை தாக்கிப் பேசுவது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர் வாதத்திடம், மதுரை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் எம்.அழகர், புகார் கொடுத்துள்ளார்.

‘‘பிரச்சாரத்தின்போது, கமல் தெரிவித்த கருத்துகளுக்கு யார் வேண்டுமானாலும் அமைதியான முறையில் மறுப்பு தெரிவிக்கலாம். ஆனால் ஓட்டப்பிடாரத்தில் செய்தியாளர்களிடம் கடந்த 13-ம் தேதி பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வன்முறையை தூண்டும் வகையிலும், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலும் கமலுக்கு எதிராக பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது வரம்பு மீறிய செயல். எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.முத்துக்குமார் புகார் கொடுத்துள்ளார்.

கமல்ஹாசன் மீது புகார்

இதற்கிடையில், கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையில் வில்லிவாக்கம், மடிப்பாக்கம், விருகம்பாக்கம், செங்கல்பட்டு உட்பட தமிழகம் முழுவதும் 36 காவல் நிலையங்களில் பாஜகவினர், இந்து அமைப்பினர் புகார் கொடுத்துள்ளனர். இதில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் மட்டும் 2 பிரிவுகளின் கீழ் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close