[X] Close

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 2 ரயில்களை செங்கல்பட்டு வரை நீட்டிக்க திட்டம்: ஜூலையில் அறிவிப்பு வெளியாகும்


2

  • kamadenu
  • Posted: 17 May, 2019 07:55 am
  • அ+ அ-

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் 2 மின்சார ரயில் சேவை செங்கல்பட்டு வரையும், திருமால்பூர் செல்லும் கடைசி ரயில் சேவை அரக்கோணம் வரையும் நீட்டிக்கப்பட உள்ளன. ஜூலையில் வெளியாகும் புதிய கால அட்டவணையில் இதுபற்றிய அறிவிப்பு இடம்பெறும் என தெரிகிறது.

ரயில்களுக்கான கால அட்டவணையை தெற்கு ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் 2 முறை வெளியிடுகிறது. இதில், சென்னை கோட்ட மின்சார ரயில்களுக்கான கால அட்டவணை ஜூலையிலும், விரைவு ரயில்களுக்கான அட்டவணை செப்டம்பர், அக்டோபர் அல்லது நவம்பரிலும் வெளியிடப்படுவது வழக்கம். ரயில்களின் நேரம் மாற்றம், புதிய ரயில்களுக்கு நேரம் நிர்ணயம், சில ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் இதில் அறிவிக்கப்படும்.

பயணிகள் கோரிக்கை

இந்நிலையில், இந்த ஆண்டுக்கு சென்னை கோட்ட மின்சார ரயில்களுக்கான கால அட்டவணை வரும் ஜூலையில் வெளியிடப்பட உள்ளது. இதில்,பல்வேறு மாற்றங்கள் செய்யுமாறு பயணிகள் நலச் சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கேட்டபோது, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:மின்சார ரயில்களுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

ரயில் நிலைய மேலாளர்கள், பயணிகள் நலச் சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் போன்ற புறநகர் பகுதிகளில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், மின்சார ரயில்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. எனவே, கூடுதலாக மின்சார ரயில்களை இயக்கவும், சில இடங்களில் மின்சார ரயில் சேவையை நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, தாம்பரம் வரை இயக்கப்படும் 2 மின்சார ரயில் சேவையை செங்கல்பட்டு வரை நீட்டிக்கவும், திருமால்பூருக்கு இயக்கப்படும் கடைசி ரயில் சேவையை அரக்கோணம் வரை நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது. வரும் ஜூலையில் வெளியாகும் மின்சார ரயில்களுக்கான கால அட்டவணையில் இதுகுறித்து முறைப்படி தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close