[X] Close

குற்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்த மிகவும் உன்னிப்பாக சிசிடிவிக்களை கண்காணிக்க உத்தரவு


  • kamadenu
  • Posted: 17 May, 2019 07:40 am
  • அ+ அ-

குற்ற நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை உன்னிப்பாக கண்காணிக்க போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். காவல் ஆணையராக 15.05.2017 அன்று பதவி ஏற்றுக் கொண்ட ஏ.கே.விஸ்வநாதன் முதல் கட்டமாக சென்னை முழுவதும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி சென்னையில் உள்ள பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையார், தியாகராய நகர், பரங்கிமலை ஆகிய 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் காவல் மாவட்ட எல்லைக்குள் தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் பங்களிப்போடு கண்காணிப்பு கேமராக்களை ஆங்காங்கே பொருத்தினர்.

அதன்படி, சென்னையில் பொது இடங்களை நோக்கி இரண்டரை லட்சம் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. தற்போது, இதன் மூலம் குற்ற நிகழ்வுகள் குறைந்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் உள்ள போலீஸார் உன்னிப்பாக கண்காணித்து அதுகுறித்து தகவல்களை சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸாருக்கு தெரிவிக்கவும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் குற்ற நிகழ்வுகளை மேலும் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.விஸ்வநாதனுக்கு வாழ்த்து

சென்னை காவல் ஆணையராக இரண்டு ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள ஏ.கே.விஸ்வநாதனுக்கு போலீஸ் அதிகாரிகள் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை பெருநகரத்தின் 105-வது காவல் ஆணையராக கரன் சின்ஹா பணியாற்றினார். 106-வது காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் 15.05.2017 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது ஏ.கே.விஸ்வநாதன் 2 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ளார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காவல் ஆணையராக இரண்டு ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ளது குறித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, “சென்னையில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களும் முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்துள்ள புகார் மனு மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமரா மூலம் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close