[X] Close

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபாதைகளை அகலமாக்கியதால் பாண்டி பஜாரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு


  • kamadenu
  • Posted: 17 May, 2019 07:42 am
  • அ+ அ-

சென்னை தியாகராயநகரில் உள்ள பாண்டி பஜாரில் நடைபாதைகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அகலமாக்கியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் ரூ.1366 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்திட்டத்தின் கீழ், பகுதி சார்ந்த வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தியாகராய நகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியை மேம்படுத்த ரூ.877 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் வாகனங்கள் மூலம் வெளியேறும் புகை மாசுவை குறைப்பதற்காக, மோட்டார் வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்க தியாகராய நகரில் உள்ள பாண்டி பஜாரில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைபாதை வளாகத் தில் மூத்த குடிமக்கள், குழந்தைகள், பாதசாரிகள், மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற் காலிகள் எளிதில் செல்லும் வகையிலும், அனைவரும் தங்குதடையின்றி நடப்பதற்கு ஏதுவாக தொடர்ச்சியான நடைபாதை, சேவைத் துறையினரின் மின் பெட்டிகளை ஒரே சீராக மாற்றியமைத்தல், சிறுவர் விளையாட்டு பகுதி மற்றும் மேம்படுத்தப்பட்ட கழிப்பிடங்கள், பொதுமக்கள் இளைப்பாறுவதற்கு வசதியான இருக்கைகள், தேவையான இடத்தில் அலங்கார விளக்குகள், கலை நயமிக்க சிலைகள், நீரூற்று மற்றும் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு தக்க இடைவெளியில் பாதசாரிகள் வழித்தடம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் ரூ.33 கோடியே 80 லட்சம் செலவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் தியாகராய சாலையின் இரு புறங்களிலும் 5 மீட்டர் முதல் 12 மீட்டர் அகலம் வரை நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலையானது, பேருந்து மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் சுமார் 7 மீட்டர் அகலத்தில் சுருக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையை குறுக்கி, நடைபாதையை அகலமாக்கிய நிலையில், பாண்டி பஜாரில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும், வாகன ஓட்டிகள் நேரத்துக்கு அலுவலகத்துக்கும், வீட்டுக்கும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:ஜூலை மாதத்துக்குள் தியாகராய நகர் சாலையில் நடைபெற்று வரும் பணிகள் முடிக்கப்பட்டுவிடும். இந்த சாலைக்கு மாற்று சாலையாக ஜி.என்.செட்டி சாலை, வெங்கட் நாராயணா சாலை ஆகியவை உள்ளன. விவரம் தெரிந்தவர்கள், அந்த சாலை வழியாக சென்றுவிடுகின்றனர். விவரம் தெரியாதவர்களும், அந்த சாலையில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வருவோரும் அந்த சாலைக்கு வருகின்றனர். அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்போது மட்டுமல்ல, நடைபாதை அமைப்பதற்கு முன்பும் பாண்டி பஜாரில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

அந்த சாலையை பனகல் பூங்காவில் இருந்து அண்ணா சாலை நோக்கி வரும் வகையில் ஒருவழிப் பாதையாக மாற்றுவது தொடர்பாக வணிகர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close