[X] Close

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சத்தை போக்க போர்க்கால நடவடிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 07:43 am
  • அ+ அ-

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க, போர்க்கால அடிப்படையில் உடனேநடவடிக்கை எடுக்க வேண்டும்என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் வறண்டுபோய் உள்ளன. தினமும் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் கடல்நீரை குடிநீராக்கும் மீஞ்சூர், நெம்மேலி திட்டங்கள் மூலம் முழு அளவு குடிநீரும் பெறப்படுகிறதா என்ற மிகப்பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.

‘குடிநீர் ஆதாரங்களாக திகழும் ஏரிகளை ஆழப்படுத்தி, நீர்தேக்க கொள்ளளவை உயர்த்தப் போகிறோம்’ என்று பட்ஜெட், மானியக் கோரிக்கைகளில் அதிமுக அரசு வெளியிட்ட அறிவிப்புகள், ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

சென்னை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக அரசு அறிவித்த கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்துக்கு 8 ஆண்டுகால அதிமுக அரசின் நிர்வாக சீர்குலைவே காரணம்.

இணையதளம், தொலைபேசி அழைப்புகளை ஏற்று, குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் கூறுகிறது. ஆனால், பதிவு செய்யப்படும் ஒரு லாரி தண்ணீர் கிடைக்க 10 முதல் 15 நாட்கள் ஆகிறது. சென்னை குடிநீர் வாரியமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் குடிநீர் பஞ்சத்தை கண்டுகொள்ளவில்லை.

கடல்நீரை குடிநீராக்கும் மீஞ்சூர், நெம்மேலி திட்டங்கள், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உட்பட தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் உள்ள அனைத்து கூட்டுக் குடிநீர் திட்டங்களும் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன.

குடிமராமத்து திட்டங்களுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக அதிமுக அரசு கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் எந்த ஏரி, குளங்களும் தூர்வாரப்படவில்லை என்பது இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை மூலம் தெரிகிறது. முதல்வர் பழனிசாமி அறிவித்த குடிமராமத்து திட்டத்துக்கு ஏற்பட்ட படுதோல்விதான் தற்போது தாண்டவமாடும் தண்ணீர் பஞ்சம்.

ஆட்சிகள் மாறும். ஆனால், அரசு நிர்வாகம் நிலையானது. எனவே, சென்னை மாநகரம் உட்பட தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர்கள் ஆகியோர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் குடிநீர் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகளை தாமதமின்றி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close