[X] Close

அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையத்தில் கூட்டத்தில் கமல்ஹாசனை நோக்கி முட்டை, காலணி, கற்கள் வீச்சு


  • kamadenu
  • Posted: 17 May, 2019 07:35 am
  • அ+ அ-

அரவக்குறிச்சி தொகுதிக்குஉட்பட்ட வேலாயுதம்பாளையத்தில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நோக்கி முட்டை, காலணிகள் வீசப்பட்டன.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர், வேலாயுதம்பாளையத்தில் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்றார்.

கூட்டத்தில், வேட்பாளரை அறிமுகப்படுத்தி அவர் பேசியதாவது: சட்டம் ஒழுங்கு சீர்கேடுஅடையும் எனக் கூறி சூலூரில் நான் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நமது கட்சியினர் எப்படிப்பட்டவர்கள் என அனைவருக்கும் தெரியும். வேறு சிலர்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். இரவு 10 மணிக்கு பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின்னர், கமல்ஹாசன் மேடையை விட்டு இறங்கிச் சென்றபோது, அவரை நோக்கி கூட்டத்தில் இருந்த சிலர் முட்டையையும், பாலிதீன்பையில் வைத்து சாணத்தையும் வீசினர்.

கல்வீச்சால் பதற்றம்

அவை கமல்ஹாசன் மீது படவில்லை. மாறாக, அவருக்கு பின்னால் சென்ற தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி மநீம வேட்பாளர் சம்பத் ராமதாஸின் முகத்தில் முட்டை விழுந்தது. மேலும், அப்பகுதியை நோக்கி காலணிகளும், கற்களும் வீசப்பட்டன. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

கட்சியினர் தாக்குதல்

இதையடுத்து, கூட்டத்தில் இருந்து முட்டையை வீசிய சிலர் தப்பிச் சென்றுவிட, ஒருவரைப் பிடித்து மக்கள் நீதி மய்யத்தினர் தாக்கினர். அவர்களிடமிருந்து அந்த நபரை போலீஸார் மீட்டுச் சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, முட்டை, காலணி வீசியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தினர் அப்பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு எஸ்.பி விக்ரமன் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் கமல்ஹாசன் இன்று (வெள்ளிக்கிழமை) 6 இடங்களில் பிரச்சாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியினர் காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக கமல் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close