[X] Close

நரம்பு தசை கட்டியால் அவதிப்பட்ட மாணவிக்கு அறுவை சிகிச்சை: அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் சாதனை


  • kamadenu
  • Posted: 17 May, 2019 07:31 am
  • அ+ அ-

நரம்பு தசையில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்ட மாணவிக்கு முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பள்ளிப்படிப்பை முடித்த பிறகு திடீரென நடக்க முடியாமல் அவதிப்பட்டார். இதற்காக சேலத்தில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் அவர் சிகிச்சைக்குச் சென்றார். அந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடநீக்கியல் துறையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது, அந்த மாணவிக்கு முதுகு எலும்பில் முன்பக்கமாகவும், பக்கவாட்டிலும் வளைவு இருந்தது தெரியவந்தது. இதற்கிடையே, அவருக்கு நரம்பு தசையில் கட்டி (நீரோஃபைப்ரோமா நோய்) இருந்ததும் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து முடநீக்கியல் துறை தலைவர் டாக்டர் தீன் முகமது இஸ்மாயில், தண்டுவட சிகிச்சை தலைவர் நல்லியுவராஜ் உட்பட 10 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் அந்த மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

இதுதொடர்பாக சென்னைராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை டீன் ஜெயந்தி, மருத்துவ கண்காணிப்பாளர் நாராயணசாமி, தண்டுவட சிகிச்சை தலைவர் நல்லி யுவராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த மாணவி, நடக்க முடியாமல் அவதிப்பட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இங்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு நரம்பு தசையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இது ஒரு மரபு வகை நோய்.

6 வாரம் சிகிச்சை

இதையடுத்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டது. முதல் கட்டமாக தலையில் பொருத்தக்கூடிய வளையத்தோடு உடலுக்கான கவசமும் பொருத்தப்பட்டது. பிறகு பொருத்தப்பட்ட அந்தக் கருவியின் திருகாணியை இயக்குவதன் மூலம் தினமும் சிறிது, சிறிதாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படி, 6 வாரம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வளைந்த எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைவதற்காக நோயாளியின் உடம்பில் இருந்தேமஜ்ஜை நிறைந்த எலும்புகுறைந்த அளவு எடுத்து சேர்க்கப்பட்டது. டாக்டர்கள் குழுவினர் 6 மணிநேரம் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். முதல் முறையாக நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் படிப்படியாக குணமடைந்து நடக்க ஆரம்பித்தார்.

தற்போது நலமாக இருக்கிறார். இந்த மருத்துவ சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் ரூ.6 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் செலவாகும்.

நரம்பு மண்டலம் பாதிப்புநீரோஃபைப்ரோமா என கூறப்படும் இந்நோயால் அதிகமாக நரம்பு மண்டலமும், எலும்புகளும் பாதிக்கப்படுகின்றன. முதுகு எலும்புகளில் இந்நோய் தாக்கும்போது தண்டுவடம் பாதிக்கப்படும். இந்த நோய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்க போதிய அளவிலான டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் இருக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக சிகிச்சை பெற்ற மாணவி கூறும்போது, ‘‘என்னால் நடக்க முடியாமல் சில மாதங்களாக அவதிப்பட்டேன். அதன்பிறகு, இங்கு வந்து மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டேன். தற்போது நலமாக இருக்கிறேன். விரைவில் நர்சிங் கல்லூரியில் சேரவுள்ளேன்’’ என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close