[X] Close

உள்ளாட்சித் தேர்தல் பணியை தொடங்கிய மாநில தேர்தல் ஆணையம்; வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான அறிவிக்கை வெளியீடு: மக்களவை வாக்குச்சாவடிகளை பயன்படுத்துவது குறித்தும் விளக்கம்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 07:30 am
  • அ+ அ-

உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்டாயதேவை ஏற்பட்டால் மக்களவைத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியை பயன்படுத்தலாம் என்றும் வாக்காளர் எண்ணிக்கையைக் கொண்டு வாக்குச்சாவடி அமைப்பது குறித்தும் மாநில தேர்தல் ஆணையம் வெளிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபருடன் தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து, தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், நீதிமன்ற வழக்கால் தேர்தல் தள்ளிப்போனது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் 3 மாதம் அவகாசம் கோரியுள்ளது.

இந்நிலையில், தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற் கான அடிப்படை பணிகளை மாநிலதேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மாநில தேர்தல் அதிகாரியாக ஊரக வளர்ச்சித் துறை ஆணையரும் சென்னை மாவட்ட ஆட்சியரை தவிர மற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாகவும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சாயத்து வாக்காளர் பதிவு அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டனர்.

தற்போது, எத்தனை வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்பது குறித்தஅறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட விதிகளின்படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை பொறுத்தவரை, சமீபத்தில் நடந்த மக்களவை பொதுத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளை கட்டாய தேவை இருப்பின் எடுத்துக் கொள்ளலாம். இல்லாத பட்சத்தில், கடந்த2016-ம் ஆண்டு விதிகளின்படி, கள நிலவரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு வார்டுக்கும் தேவைகளை கருதி புதிய வாக்குச்சாவடிகளை அமைக்கலாம்.

இவ்வாறாக அமைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியலை, மாவட்ட தேர்தல் அதிகாரி, பேரூராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி, நகராட்சிமற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெளியிட வேண்டும்.

வாக்காளர் பட்டியல்

ஒரு பகுதியில் உள்ள பாகத்துக்கு உட்பட்ட வாக்காளர்கள் எவரும் விடுபடாமல் வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். அதற்கு உரிய படிவத்தில் வெளியிடப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலுடன் அந்த பாகத்துக்குரிய வரைபடம் இடம் பெற வேண்டும். மேலும், பேரூராட்சிகள், நகராட்சிகளில் ஒரு வார்டில் 1,200 வாக்காளர்கள், மாநகராட்சி பகுதிகளில் 1,400 வாக்காளர்கள் இருந்தால் அதை ஒரு பாகமாக கணக்கிட்டு, ஒரே ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட வேண்டும்.

பேரூராட்சிகள், நகராட்சிகளில் ஒரு வார்டில் 1,200-லிருந்து 1,400 வாக்காளர்கள், மாநகராட்சி பகுதியில் 1,400 வாக்காளர்களுக்கு மேல், அதேநேரம் 2,400 அல்லது 2,800 வாக்காளர்களுக்கு குறைவாக இருந்தால் 2 வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும்.

தனித்தனி வாக்குச்சாவடி

ஒரே பாகத்துக்குள் வாக்காளர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தால் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும். இரு பாகங்களாக இருந்தால் இரு வாக்குச்சாவடிகள் அமைத்து, அனைவரையும் அனுமதிக்கலாம்.

மேலும், பேரூராட்சி, நகராட்சிகளில் ஒரு வார்டில் 2,400 வாக்காளர்களுக்கு அதிகமாக இருந்தாலோ, மாநகராட்சி பகுதிகளில் 2,800 வாக்காளர்களுக்கு அதிகமாக இருந்தாலோ, அதேநேரம் 3,600 அல்லது 4,200 வாக்காளர்களுக்கு குறைவாக இருந்தால் 3 வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும்.

அனைவரையும் அனுமதிக்கலாம்

இவற்றில் வாக்காளர்கள் 2 பாகங்களுக்குள் வந்தால், ஒரு வாக்குச்சாவடி அனைத்து வாக்காளர்களுக்கும், மற்ற இருவாக்குச்சாவடிகள் ஆண், பெண்வாக்காளர்களுக்கும் தனித்தனியாகவும் அமைக்கலாம். 3 பாகங்களில் வந்தால் 3 வாக்குச்சாவடிகளிலும் அனைத்து வாக்காளர்களையும் அனுமதிக்கலாம்.

மேலும், அந்தந்த வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர் பட்டியல்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close