[X] Close

மாங்காய்களை சேதப்படுத்த வரும் வெளவால்களை இரவு முழுவதும் விரட்டும் கயறு வெடிகள்: எளிய முறையில் தற்காக்கும் விவசாயிகள் 


  • kamadenu
  • Posted: 16 May, 2019 16:53 pm
  • அ+ அ-

-என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம் மாந்தோப்புகளில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வந்து மாங்காய்களைக் கடித்து சேதப்படுத்தி வருகிறது. இவற்றை விரட்டுவதற்காக கயறுகளில் வெடிகளைச் செருகி இரவு முழுவதும் தன்னிச்சையாக வெடிக்கும் முறையை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.

பெரியகுளம் அருகே கோயில்காடு, சோத்துப்பாறை, உப்புக்காடு, சித்தாறு, மணக்காடு, சுக்காம்பாறை, தொண்டைகத்தி, கும்பக்கரை, பாலாட்டி, முருகமலை, செழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் இந்த விவசாயத்தில் 65 சதவீதம் காசா ரக மா பயிரிடப்பட்டுள்ளது.

மேலும் கள்ளாமை, செந்தூரம், காலபாடி, காதர் உள்ளிட்ட ரக மாம்பழங்களும் விளைகின்றன. சுற்றிலும் மலைகள் சூழ்ந்து ஏற்ற பருவநிலை நிலவுவதால் பெரியகுளம் மா விளைச்சலில் குறிப்பிடத்தக்க நிலையில் உள்ளது.

தற்போது விளைச்சல் பருவம் என்பதால் அவற்றை பறிப்பதிலும், விற்பனை செய்வதிலும் விவசாயிகளும், வியாபாரிகளும் மும்முரமாக உள்ளனர். மலையடிவாரப் பகுதிகளிலே பெரும்பான்மையான தோட்டம் இருப்பதால் விளைந்த காய்களைப் பாதுகாப்பதில் விவசாயிகளும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தினமும் ஆயிரக்கணக்கணக்கில் வந்து குவியும் வெளவால்கள் தோப்புகளில் புகுந்து மாங்காய்களைக் கடித்து சேதப்படுத்துகின்றன. காலையில் ஒவ்வொரு மரத்தடியிலும் ஏராளமான மாங்காய்கள் குதறிய நிலையில் விழுந்து கிடக்கின்றன.

எனவே தற்போது இப்பகுதி விவசாயிகள் எளிய வெடிநுட்ப முறைகளைக் கையாண்டு வெளவால்களை விரட்டி வருகின்றனர். இதற்காக கொச்சக்கயறில் வெடிகளை ஆங்காங்கே செருகி கயிற்றின் நுனியில் தீப்பற்ற வைக்கின்றனர்.

இதேபோன்று தோப்பின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டித் தொங்க விட்டுச் சென்று விடுகின்றனர். இதன் மேல்பகுதியில் மழை பெய்தாலும் ஈரம்படாத அளவுக்கு மேற்கூரையும் அமைத்துள்ளனர். கயற்றில் உள்ள கங்கு மெல்ல மேலேறி வரும் போது செருகப்பட்டுள்ள வெடியின் திரி பற்றி வெடிக்கிறது.

பின்பு கங்கு அடுத்த வெடிக்கு மெல்லப் பரவி வெடிக்கிறது. இதனால் வெடிச்சத்தம் தோப்பின் பல பகுதிகளில் இருந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். இதற்கு பயந்து வெளவால்கள் தோப்புக்குள் நுழைவதில்லை.

இதுகுறித்து விவசாயி வெற்றிவேல் கூறுகையில்," இதற்காக 4 மீட்டர் நீளமுள்ள கொச்சக்கயறை ரூ.30க்கு வாங்கி ஒரு மீட்டராக துண்டித்து வைத்துக் கொள்வோம். இரவு 7 மணிக்கு கயற்றில் கங்கு வைத்துவிட்டுச் செல்வோம். தோப்பில் பல பகுதிகளில் வெவ்வேறு நேரத்தில் வெடிக்கும். அதிக சப்தம் வரும் வெடிகளை செக்கானூரணி, பூதிப்புரம், வடக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாங்கி வருவோம்.

அந்த வகையில் ஒருநாளைக்கு வெளவால்களை விரட்ட ரூ.300 செலவாகிறது. விவசாயத்தில் இது ஒரு கூடுதல் செலவாக இருக்கிறது. இருப்பினும் சேதத்தைத் தடுக்க வேறுவழி தெரியவில்லை. இதனால் காட்டுப்பன்றியும் நுழைவதில்லை" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close