[X] Close

நெசவுக்கும் வந்தனை செய்வோம்... கைத்தறியாளர்களுக்கு கைகொடுக்கும் கோ-ஆப்டெக்ஸ்!


  • kamadenu
  • Posted: 16 May, 2019 09:06 am
  • அ+ அ-

-ஆர்.கிருஷ்ணகுமார்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்றார் மகாகவி பாரதி. உழவுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த தொழில் நெசவுத் தொழில்தான். ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு வரை கைத்தறி நெசவுதான் நமது ஆடை தேவையைப்பூர்த்தி செய்தன. ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தபட்ட நூற்பாலைகள் வந்தவுடன், மேலை நாகரிகம் தலைதூக்கி, உடைகளில் அநேக மாற்றங்கள் ஏற்பட்டன.

தங்கள் நாட்டு நெசவுத் தொழிலை மேம்படுத்துவதற்காக நமது பாரம்பரிய நெசவை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் வெள்ளையர்கள். இதனாலேயே, அந்நியத் துணிகளை புறக்கணித்து, கைத்தறி நெசவைக் காப்போம் என நம் தலைவர்கள் முழங்கினர். சுதந்திரத்துக்குப் பிறகும் நமது பாரம்பரிய கைத்தறி ஆடைகளுக்கான மவுசு படிப்படியாக குறைந்தது என்பதே நிஜம். இந்த நிலையில்தான், கைத்தறி நெசவாளர்களைக் காப்பதையே முதல் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம்.

தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக 1935-ல் உருவாக்கப்பட்டது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். குறிப்பாக, கைத்தறி நெசவாளர்களை ஒன்றிணைத்து, அவர்களது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தி, அவர்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கவும், ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கச் செய்வதுமே இந்நிறுவனத்தின் முதல் குறிக்கோள்.

1,400 கூட்டுறவு சங்கங்கள்...

1935-ல் 28 கூட்டுறவு சங்கங்களுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ச்சியடைந்தது. தற்போது 1,400 கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுமார் 80 ஆயிரம் நெசவாளர்கள்  கோ-ஆப்டெக்ஸுடன் இணைந்துள்ளனர்.

நாடு முழுவதும் 16 மாநிலங்களில் 180-க்கும் மேற்பட்ட கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும்120-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டுறவு நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் கர்ச்சீஃப் முதல், ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டுச்சேலை வரை இவற்றில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக,  காஞ்சிபுரம், ஆரணி பட்டுச் சேலைகள், கோவை, சேலத்திலிருந்து மென்பட்டுச் சேலைகள், பவானி, சென்னி மலையிலிருந்து பெட்ஷீட், தரைவிரிப்புகள், புவனகிரி, கடலூரிலிருந்து லுங்கி, பொள்ளாச்சியிலிருந்து நெகமம்

சேலைகள் மற்றும் ரெடிமேட் ஆடைகளைத் தருவித்து, அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பி, விற்பனை செய்யப்படுகிறது. ஏறத்தாழ 200 வகையான ஆடைகளை விற்பனை செய்த போதிலும், பெரும்பாலானவை கைத்தறியால் நெசவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் டி.என்.வெங்கடேஷ், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியிலும், நெசவாளர்கள் மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார். இரு தினங்களுக்கு முன் கோவை வந்த அவரை சந்தித்தோம்.

“கோ-ஆப்டெக்ஸ் என்று பொதுவாக அழைக்கப்படும், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க நிறுவனத்தின்  முதல் குறிக்கோள் நெசவாளர்கள் நலன் தான். நெசவாளர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக இருப்பது மட்டுமே கோ-ஆப்டெக்ஸின் பணி. இந்நிறுவனம் மூலம் லட்சக்கணக்கான நெசவாளர் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்றுள்ளன. வியாபார இலக்குஎன்பது எங்களுக்கு இரண்டாம் பட்சம்தான்.

ஆண்டுமுழுவதுமே கைத்தறி நெசவாளர்களுக்கு பணிகிடைக்க வேண்டுமென்பதற்காகவே பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

பருத்தி ஆடைகளுக்கு முக்கியத்துவம்!

தற்போது அசல் பட்டு விற்பனை என்ற இலக்கை கடந்து, சில்க் காட்டன், ப்யூர் காட்டன் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். எங்களது மொத்த விற்பனையில்  60 சதவீதம் விற்பனை பருத்தி ஆடைகள் என்பதால், பருத்தி சேலைகள், சட்டைகள், பெட்ஷீட்டுகள் என பருத்தி ஆடைகளின் மீது கவனத்தைக் குவித்துள்ளோம். அதேசமயம், பருத்தி ஆடைகள் நமது தட்பவெப்பநிலைக்கு ஏற்றதுடன், உடல் ஆரோக்கியத்துக்கும் உகந்தது. கோடைகாலத்துக்கு ஏற்ற வகைவகை யான  பருத்தி ஆடைகளை வடிவமைப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

நடப்பாண்டில், அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு பயிலகத்துடன் (என்.ஐ.டி). புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, அங்குள்ள இளம் வடிவமைப்பாளர்களைக் கொண்டு, திண்டுக்கல், மதுரை, பரமக்குடி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போதைய தேவைக்கேற்ற புதிய ரகம், வண்ணங்களில் பருத்தி ஆடைகளை வடிவமைத்து வருகிறோம்.  நமது நெசவாளர்கள் சில பாரம்பரிய வண்ணங்களை மட்டுமே பயன்படுத்துவர். அதேசமயம், என்.ஐ.டி. பயிலும் மாணவர்கள் மூலம், புதுமையும், பழமையும் கலந்த டிசைன்களையும், புதிய வண்ணங்களையும் பயன்படுத்தி ஆடைகளை உருவாக்குகிறோம். இதேபோல, ‘ஆர்கானிக் காட்டன்’ ரகத்தில் ‘ரங்கோலி (கோலம்)’ டிசைன் உருவாக்கியுள்ளோம்.

மேலும், திருப்பூர் கணபதிபாளையம் கூட்டுறவு சங்கம் மூலம் லினென் சேலைகளையும், சிறுமுகை கூட்டுறவு சங்கம் மூலம் எடைகுறைந்த மென்பட்டுச் சேலைகளையும், காதியைப் போன்ற ‘ஸலப்யான்’ ரகங்களையும் அதிகம் உருவாக்கி வருகிறோம். சில்க் காட்டன் ரகத்தில் ‘ஆயிரம் புட்டா’ ரக  சேலைகளுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது. ப்யூர் காட்டன் மற்றும் சில்க் காட்டன் ரகங்களில் உருவாகும் இந்த ரக சேலைகள் ரூ.5,000-க்கு கிடைக்கும்.

வாடிக்கையாளர் சந்திப்பு!

கோ-ஆப்டெக்ஸ் பாரம் பரியமான நிறுவனமாக இருந்தாலும், புதுமையான ரகங்கள், டிசைன்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து உருவாக்குவதே வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். அதேபோல, மக்களுடன் எப்போதும் அதிக தொடர்பில் இருப்பதே கோ-ஆப்டெக்ஸின் தனித்தன்மையாகும். இந்நிறுவனத்துக்கு மொத்தம் 11 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் 8 மண்டலங்கள் தமிழகத்திலும், 3 மண்டலங்கள் வெளி மாநிலங்களிலும் இருக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் முதல்முறையாக மண்டல அளவில் வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினோம். ஒவ்வொரு மண்டலத்திலும், வெவ்வேறு தரப்பைச் சேர்ந்த 100 வாடிக்கையாளர்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டுள்ளோம். இதில் வாடிக்கையாளர்கள் தெரிவித்த கருத்துகள், மாற்றங்கள், டிசைன்கள் ஆகியவை வரும் தீபாவளிக்குள் நடைமுறைப்படுத்தப்படும். கடந்த ஆண்டு பெல்ட் மற்றும் பாக்கெட் கொண்ட வேஷ்டியை அறிமுகப்படுத்தினோம். இவ்வாறு, காலத்துக்கேற்ப டிசைன்களைக் கொண்டு வருகிறோம். அதேசமயம், கைத்தறிநெசவாளர்களால் என்ன முடியுமோ அந்த டிசைன்களை மட்டுமே தருவிக்கிறோம். இயந்திரம் மூலம் உருவாக்க வேண்டிய டிசைன்களை நாங்கள் ஊக்குவிப்பதில்லை.

கோ-ஆப்டெக்ஸ் என்றாலே தரமும், நீடித்த தன்மையும்தான் மக்கள் நினைவுக்கு வரும். எனவே, இவற்றைப் பராமரிப்பதில் எவ்வித சமரசமும் மேற்கொள்வதில்லை. ஓராண்டில்  ரூ.300 கோடி அளவுக்கு கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி விற்பனை மேற்கொள்கிறது. இதில், ஷோரூம்கள் மூலம் ரூ.275 கோடியும், ரூ.25 கோடி வரை ஒப்பந்த அடிப்படையிலும் விற்பனை நடைபெறுகிறது. நடப்பாண்டு ரூ.320 கோடியாக விற்பனை இலக்கை நிர்ணயித்துள்ளோம்.

தற்போது `ஹோம் டெக்ஸ்டைல்’ துறையிலும் அதிக  கவனத்தை செலுத்துகிறோம்.  பயணம் செய்பவர்கள், விடுதி மாணவர்களுக்கான படுக்கை, தலையணைகள், புதிய திரைச்சீலைகள், ஷோபா கவர்கள், சமையலறைக்குத் தேவையான ஆடைகள், புதிய ரக பெட்ஷீட்டுகள் ஆகியவற்றை நவீன வடிவில் தயாரிக்கிறோம். இவற்றின் சந்தை மதிப்பு ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை உள்ளதால், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இந்த தயாரிப்புகளை அதிக அளவில் உற்பத்தி செய்கிறோம்.

வகைவகையான துணிப் பைகள்!

பிளாஸ்டிக் தடைக்குப் பிறகு, துணிப் பைகள் உற்பத்தியைத் தீவிரப்படுத்தியுள்ளோம். ஹேண்ட்பேக் வடிவிலான பைகள், வெவ்வேறு காய்கறிகள் கொண்டுசெல்லும் வகையில் பல அடுக்குகள் கொண்ட பைகள் ஆகியவற்றை உருவாக்கி வருகிறோம். ஒரே பையில் வெவ்வேறு அடுக்கில் காய்கறி வாங்கிச் செல்ல முடியும். கைத்தறி நெசவாளர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் இது மிகவும் பயனுள்ள முறையில் இருக்கும். இதேபோல, நவீன கைப்பைகள், பைகள் தயாரிப்பில் புதுமையைப் புகுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.

கடலூர் அருகேயுள்ள காரைக்காடு குறிஞ்சிப்பாடி பகுதி நெசவாளர்கள் ஹேண்ட்லூம் காட்டன் சட்டைகளும் அதிக அளவில்  தயாரிக்கிறோம்.

கோ-ஆப்டெக்ஸ் பொறுத்தவரை, மேற்கு மண்டலத்தில் நெசவாளர்கள் மிகவும் அதிகம். பருத்தி சேலை, போர்வை, ஜமக்காளம், மென்பட்டு, கோவை காட்டன், நெகமம் காட்டன், வனவாசி சேலைகள், ராசிபுரம் பட்டுச் சேலைகள் என  மேற்கு மண்டல மாவட்டங்களில் அதிக அளவிலான ஜவுளிகள் தயாரிக்கப்படுகின்றன. சென்னை மண்டலத்துக்கு அடுத்தபடியாக, கோவை, சேலம் மண்டலம் அதிக வருவாய் ஈட்டித் தருகிறது” என்றார் பெருமிதத்துடன் டி.என்.வெங்கடேஷ்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close