[X] Close

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக உயர் அழுத்த மின்கம்பிகளில் ஏற்படும் பாதிப்பே மின்தடைக்கு காரணம்: மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 09:02 am
  • அ+ அ-

சுட்டெரிக்கும் வெயிலால் உயர்அழுத்த மின்கம்பிகளில் ஏற்படும் பாதிப்பே, சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஆகியவற்றுக்கு காரணம் எனமின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. இதன் காரணமாக தினசரி மின்தேவை தற்போது 16 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டியுள்ளது. மின்பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க மின்வாரியம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அனல் மின்சாரம், சூரியஒளி மற்றும் காற்றாலைமூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்து விநியோகம் செய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பல இடங்களில் மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்தடை குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியது:மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உயர் அழுத்த மின்கம்பிகள் வழியாக துணைமின் நிலையங்களுக்கு கொண்டு சென்று பின்னர்அங்கிருந்து வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் மின்கம்பிகளில் மின்சாரம் செல்வதால் அவை எப்போதும் அதிகபட்ச வெப்பநிலையில் இருக்கும். இந்நிலையில், சூரிய வெப்பம்மின்கம்பிகளில் படுவதால், ஏற்கெனவே சூடாக இருக்கும் மின்கம்பிகள் மேலும் வெப்பமடைந்து தொய்வு அடைகின்றன. இதனால்,அந்த மின்கம்பிகள் மூலம் மின்சாரத்தை சீராக கொண்டு செல்ல முடியாமல் மின்விநியோகத்தில் மின்தடை ஏற்படுகிறது.

மேலும், வீடுகளில் இரவில் ஏசியைப் பயன்படுத்துபவர்கள் குறிப்பாக, இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் பெரும்பாலானவர்கள் ஏசியை இயக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் மின்நுகர்வு திடீரென அதிகரிக்கிறது. இதன் காரணமாகவும் மின்னழுத்தப் பிரச்சினை ஏற்படுகிறது என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close