[X] Close

மழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்துவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: மத நம்பிக்கையில் தலையிட முடியாது என நீதிபதிகள் கருத்து


  • kamadenu
  • Posted: 16 May, 2019 07:56 am
  • அ+ அ-

கோயில்களில் மழை வேண்டி யாகம் நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாதுஎனக் கூறி உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வி.அன்பழகன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழகத்தில் பருவமழை பொய்த்து குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடி வருகிறது. தலைநகர் சென்னையிலும் பல்வேறு இடங்களில் கடுமையான தண்ணீ்ர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த தட்டுப்பாட்டை போக்கவும், மக்களின் சிரமத்தை குறைக்கவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தமிழக அரசு, தற்போது இந்து அறநிலையத் துறை மூலமாக கோயில்களில் மழை வேண்டி யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி அறநிலையத்துறை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் மழை வேண்டி யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே இதுதொடர்பாக அறநிலையத்துறை பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சி.வி.கார்த்திக்கேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘இந்த யாகத்துக்கு அரசே நிதிஒதுக்கீடு செய்திருப்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு உத்தரவிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் கிடையாது’ என வாதிடப்பட்டது.

ஆனால் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருஞானசம்பந்தரின் பஞ்சாங்க நூலில் மழை வேண்டி யாகம் நடத்தலாம் என பல்வேறு குறிப்புகள் உள்ளன. தவிர இது மதநம்பிக்கை தொடர்புடையது’ என வாதிட்டார்.

மக்களின் நலனுக்காகவே..

அதையடுத்து நீதிபதிகள், ‘‘வானவியல் ஜோதிடத்தில் இன்றும் தமிழர்கள்தான் கோலோச்சுகின்றனர். அடுத்த சில மாதங்களில்ஏற்படும் கிரகணம் பற்றிய நிகழ்வுகளை மேற்கத்திய ஜோதிடர்களால் கணிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். யாகம் நடத்துவது என்பதும் மக்களின் நலனுக்காகவே. இந்த யாகம் ஜெயிக்கிறதா இல்லை தோற்கிறதா என்பது வேறுவிஷயம். ஆனால் இதுபோன்ற மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது’’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close