[X] Close

ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக நீச்சல் வீரர் லாரியில் சிக்கி உயிரிழப்பு


  • kamadenu
  • Posted: 16 May, 2019 07:59 am
  • அ+ அ-

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தமிழக நீச்சல் வீரர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரியில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை அமைந்தகரை அருகே உள்ள ஷெனாய் நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் டாக்டர் பத்ரிநாத். இவரது மகன் பாலகிருஷ்ணன்(29). நீச்சல் வீரர். 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அமெரிக்காவில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த சிலதினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சென்னைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்களைப் பார்த்துவிட்டு தனது இருச்சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அரும்பாக்கம் பூந்தமல்லி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே முன்னே சென்று கொண்டிருந்த கான்கிரீட் கலவை லாரியை முந்திச் செல்ல பாலகிருஷ்ணன் முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி லாரியின்சக்கரத்துக்குள் சிக்கி விட்டார். இதில் லாரியின் சக்கரங்கள் பாலகிருஷ்ணன் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனைக் கைது செய்தனர்.

இதற்கிடையே, பாலகிருஷ்ணனை ஆசிய போட்டியில் கலந்துகொள்ள விடாமல் தடுப்பதற்காக இதற்கு முன்னர், மர்ம கும்பல் ஒன்று அவர் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இந்த விபத்து அவரது குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாலகிருஷ்ணனின் முன்விரோத சம்பவங்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close