[X] Close

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை குறித்த புத்தாக்க பயிற்சி: துணை தேர்தல் ஆணையர்கள், இயக்குநர்கள் பங்கேற்பு


5

  • kamadenu
  • Posted: 16 May, 2019 07:51 am
  • அ+ அ-

வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழகம், கேரளா, குஜராத் மற்றும் 2 யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு துணை தேர்தல் ஆணையர்கள் பயிற்சி அளித்தனர்.

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ம்தேதி நடந்து முடிந்தது. இந்தத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்களும் விவிபாட் இயந்திரங்களும் 45 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. சூலூர்உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இதைத் தொடர்ந்து மே 23-ம் தேதிவாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதற்கான அடிப்படை பணிகளைதேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகளின் விவிபாட் பதிவுகள் எண்ணப்பட்டு, சரிபார்க்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதவிர, தமிழகத்தில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி நடந்த44 வாக்குச்சாவடிகளின் விவிபாட்இயந்திர பதிவுகளை எண்ணவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தூதரகங்கள், ராணுவத்தில் பணிபுரிவோருக்கான மின்னணு தபால் வாக்குகள் எண்ணும் முறையில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் புகுத்தியுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சென்னையில் நேற்று புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த பயிற்சியில் தமிழகம், கேரளா, குஜராத், லட்சத்தீவுகள், புதுச்சேரியில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனா உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். தேர்தல் ஆணையம் சார்பில், முதுநிலை துணை தேர்தல் ஆணையர்கள் உமேஷ் சின்ஹா, சந்தீப் சக்சேனா, இயக்குநர் நிகில்குமார், தேர்தல் ஆணைய இயக்குநர் (செலவினங்கள்) திலீப் சர்மா ஆகியோர் பயிற்சி அளித்தனர். துணைதேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா, வாக்கு எண்ணிக்கை தொடர்பான தேர்தல் ஆணையத்தின் கையேட்டை வெளியிட்டார்.

பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழிமுறைகள், விவிபாட் இயந்திரத்தில் வாக்குச்சீட்டுக்களை எடுத்து எண்ணும் முறை, அஞ்சல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும், தபால் வாக்குகளை மின்னணு முறையில் மாற்றுவதற்கான இடிபிபிஎஸ் மூலம் பெறப்பட்ட வாக்குகளை எண்ணுவது தொடர்பான பயிற்சியும் அளிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையத்தில், ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 வாக்குச்சாவடி விவிபாட் இயந்திரத்தை எவ்வாறு தேர்வு செய்து எண்ணுவது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் கூறும்போது, ‘‘வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் துணை ஆணையர்கள் புத்தாக்கப் பயிற்சி அளித்தனர். வாக்கு எண்ணிக்கையின்போது என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் எந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்என்பது குறித்த உதாரணங்களுடன் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close