[X] Close

பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி பட்டியல் வெளியீடு: 6 தனியார் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை; 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி


6-3-80

  • kamadenu
  • Posted: 16 May, 2019 07:45 am
  • அ+ அ-

பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, 6 தனியார் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. மொத்தமுள்ள 481 கல்லூரிகளில் வெறும் 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என தமிழ்நாட்டில் 540-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.

பொறியியல் கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2018 நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளில் பிஇ, பிடெக் மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் இணையதளத்தில் (aucoe.annauniv.edu) நேற்று வெளியிடப்பட்டன.

இதில், 481 இணைப்பு அங்கீகார கல்லூரிகளின் தேர்ச்சி விகித விவரங்களை கல்லூரிகள் வாரியாக அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்வெழுதினர்? அவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர்? தேர்ச்சி விகிதம் எவ்வளவு? ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

தேர்ச்சி விகித பட்டியலின்படி, 6 தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. அதாவது, தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளனர். மேலும் மொத்தமுள்ள 481 கல்லூரிகளில் 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி 88.12 சதவீத தேர்ச்சியும்,கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி 85.57 சதவீத தேர்ச்சியும், நாமக்கல் விவேகானந்தா மகளிர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 81.65 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன.

கல்லூரிகள் வாரியான தேர்ச்சி விகித விவரங்கள் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். இதன்மூலம் அவர்கள் குறிப்பிட்ட பொறியியல் கல்லூரியின் கல்வித்தரத்தை ஓரளவு மதிப்பிட முடியும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close