[X] Close

காதலனை ஆள் வைத்து கடத்திய வழக்கில் டென்னிஸ் வீராங்கனை விமான நிலையத்தில் கைது: கடத்தலுக்கு உதவியவர்களும் சிக்கினர்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 07:47 am
  • அ+ அ-

காதலனை ஆள் வைத்து கடத்திய டென்னிஸ் வீராங்கனை அமெரிக்கா தப்பிச் செல்ல முயன்ற நிலையில், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர் நவீத் அகமது(19). லயோலா கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கிறார். கடந்த சனிக்கிழமை சேத்துப்பட்டு அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நவீத் அகமதுவை, மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று தாக்கி, அவரது செல்போனை பறித்துச் சென்றனர்.

டி.பி. சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கடத்தலில் ஈடுபட்ட வேளச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர், சரவணன் ஆகியோரை முதலில் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் நவீத் அகமதுவை அவரது காதலியும், டென்னிஸ் வீராங்கனையுமான வாசவிதான் கடத்தச் சொன்னது தெரியவந்தது. இருவரின் காதலில் பிரச்சினை ஏற்படவே, காதலிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என நவீத் மிரட்டியதால், தனது நண்பர்கள் மூலம் கடத்தி அந்த செல்போனைப் பறிக்க டென்னிஸ் வீராங்கணை வாசவி திட்டமிட்டது தெரியவந்தது.

அமெரிக்காவில் படித்து வரும் வாசவி அங்கேயே டென்னிஸ் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் விடுமுறைக்கு சென்னை வந்திருந்த வாசவி,போலீஸ் தேடுவதை அறிந்து அமெரிக்கா தப்பிச் செல்ல முயன்றார்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வாசவியை போலீஸார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நுங்கம்பாக்கம் கோகுல், அரும்பாக்கம் அபிஷேக் ஆகியோரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பள்ளி மாணவன் ஒருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

நவீத்திடம் இருந்து பறித்த செல்போனை கழிவுநீர் கால்வாயில் வீசியுள்ளதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தவறான வழியில் செல்லாமல் போலீஸாரிடம் புகார் கொடுத்திருந்தால் நவீத்தை கைது செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close