[X] Close

விருதுகளுக்கு அப்பாற்பட்டவர் பாலகுமாரன்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் புகழாரம்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 07:41 am
  • அ+ அ-

எழுத்தாளர் பாலகுமாரன் உலகின்எந்த விருதுகளுக்கும் அப்பாற்பட்ட உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் பேசினார்.

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் முதலாமாண்டு நினைவுக்கூட்டம் சென்னை தி.நகர் வாணி மஹாலில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் நரனுக்கு பாலகுமாரன் இலக்கிய விருதும், ரூ.25 ஆயிரம் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டன.

இந்த விருதை வழங்கி தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் பேசும்போது, ‘‘பாலகுமாரன் உலகின் எந்த விருதுகளுக்கும் அப்பாற்பட்ட உயர்ந்த நிலையில் இருக்கிறார். காலம்கடந்தும் அவரது எழுத்துகள் போற்றப்படும். அவர் பெயரில் சிறந்த எழுந்தாளர்களுக்கு விருது வழங்குவது பாராட்டத்தக்கது. இந்த நிகழ்வு தடையின்றி தொடர வேண்டும்’’என்றார்.

எழுத்தாளர் நரன் பேசும்போது, ‘‘சிறுவயதில் பாலகுமாரன் எழுத்துகளைத்தான் முதலில் படிக்க ஆரம்பித்தேன். பல்வேறு பிரமிப்புகளை அவை ஏற்படுத்தும். ஒரு படைப்பாளிக்கு பாராட்டு மிகவும் அவசியம். அது தொடர்ந்து கிடைத்த காரணத்தால்தான் தன்கடைசி காலம் வரை பாலகுமாரன் எழுதிக் கொண்டே இருந்தார். எல்லா தரப்பினருக்கும் பாலகுமாரனைப் பிடிக்கும். அவர் பெயரில் எனக்கு விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சி. தன் எழுத்துகள் மூலம் தொடர்ந்து நம் நினைவில் அவர் வாழ்வார்’’ என்றார்.

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசும்போது, ‘‘இலக்கியத்துக்கும், வாழ்வுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்து மறைந்தவர் பாலகுமாரன். தன் எழுத்துகள் மூலம் நேர்மறையான எண்ணங்களை, தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். எத்தகைய தோல்வியில் இருந்தும் மீண்டெழுந்து வாழ முடியும் என்பதை தன் கதைகள் மூலம் கற்றுத் தந்துள்ளார. தன் வாழ்வை ரசித்து முழுமையாக வாழ்ந்து சென்றுள்ளார்.

எழுத்தாளர்கள், இசை கலைஞர்கள் கவுரவிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் சிறந்த இளம் படைப்பாளிகள் மரியாதை செய்யப்பட வேண்டும்’’என்றார்.

முன்னதாக ‘தி இந்து தமிழ் திசை நாளிதழ்’ சார்பாக ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் வரைந்த பாலக்குமாரனின் படம் அவர் குடும்பத்தினருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close