[X] Close

துணைமின் நிலையங்களை ஊழியர்கள் இன்றி இயக்க திட்டம்: தமிழக மின்வாரியம் நடவடிக்கை


  • kamadenu
  • Posted: 16 May, 2019 07:36 am
  • அ+ அ-

துணைமின் நிலையங்களை ஊழியர்கள் இன்றி, கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கும் புதிய முறையை செயல்படுத்த தமிழக மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அங்கிருந்து மின்தடம் வழியாக துணைமின் நிலையங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் சீராக வழங்கப்படுவதைக் கண்காணிக்கவும், துணைமின் நிலையங்களைப் பராமரிப்பதற்காகவும் ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் 24 மணி நேரமும் துணைமின் நிலையங்களில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனம், ஊழியர்கள் இன்றி துணைமின் நிலையங்களை இயக்கும் புதிய முறையை உருவாக்கி, அதை வெற்றிகரமாக செயல்படுத்தியது. இப்புதிய முறையைப் பின்பற்றி மதுரை, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள தலா ஒரு துணைமின் நிலையம், ஊழியர் இன்றி இயக்கப்பட்டு வருகிறது. இதே நடைமுறை சென்னையிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, அண்ணாசாலை அருகில் உள்ள உட்ஸ் சாலை துணைமின் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 33/11 கிலோ வோல்ட் திறன் கொண்ட இந்த துணைமின் நிலையம் ஓராண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த துணைமின் நிலையத்தை ஊழியர்கள் இன்றி கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்த துணைமின் நிலையம் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட உள்ளது. இதன் செயல்பாட்டைப் பொறுத்து படிப்படியாக பிற துணைமின் நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close