[X] Close

போலி நிதி நிறுவனம் நடத்தி 11 ஆயிரம் பேரிடம் ரூ.50 கோடி மோசடி: மதுரையைச் சேர்ந்த 4 பேர் கைது


11-50-4

  • kamadenu
  • Posted: 16 May, 2019 07:29 am
  • அ+ அ-

நிதிநிறுவனம் நடத்தி 11 ஆயிரம் பேரிடம் ரூ.50 கோடி மோசடி செய்த புகாரில் மதுரையைச் சேர்ந்த 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: 2011-ல் சென்னையை தலைமையிடமாக கொண்டு ‘மதுரம் புரமோட்டர்ஸ் அண்ட் பிராப்பர்டீஸ் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள், மதுரை, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் செயல்பட்டு வந்தன. இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக மதுரையைச் சேர்ந்த சரவணகுமார், நமச்சிவாயம், கணேசன் மற்றும் கதிரவன் ஆகிய 4 பேர் செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில், அதிக வட்டித் தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாயை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. பணம் செலுத்தியவர்களுக்கு முதிர்வு காலம் முடிந்தும், கொடுத்த தொகையை திருப்பித் தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், வேலூரைச் சேர்ந்த விக்ரம் என்பவர் கடந்த ஆண்டு வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, ‘மதுரம் புரமோட்டர்ஸ் அண்ட் பிராப்பர்டீஸ் லிமிடெட்’ நிறுவனத்தினர் தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பேரிடம் பணத்தை பெற்று அந்த தொகையை முதலீட்டாளர்களிடம் திருப்பித் தராமல் ரூ.50 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் இயக்குநர்களை கைது செய்ய முயன்றபோது அவர்கள் தலைமறைவாகினர். இதற்கிடையில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில், வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மதுரைக்கு சென்றனர்.

அங்கு பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்த சரவணகுமார், கதிரவன், நமசிவாயம் மற்றும் கணேசன் ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர். இவர்களது நிதி நிறுவனங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள், பாண்டு பத்திரங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close