[X] Close

நான் பேசியது சரித்திர உண்மை: திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு


  • kamadenu
  • Posted: 15 May, 2019 17:57 pm
  • அ+ அ-

நான் பேசியது சரித்திர உண்மை. உண்மை கசக்கும். கசப்பே மருந்தாகும். அந்த மருந்தால் வியாதி குணமாகும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

முன்னதாக, அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து" என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். கமல்ஹாசன் கருத்துக்கு பிரதமர் மோடியும் பதிலளித்தார்.

இந்நிலையில், 2 நாட்களுக்குப் பின்னர் இன்று(புதன்கிழமை) மாலை மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் பேசிய கமல்ஹாசன் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் பேசியது சரித்திர உண்மை. நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. அவமானங்களைக் கண்டு அஞ்சவில்லை. என் பேச்சை முழுவதுமாக கேட்காமல் நுனியை மட்டும் கத்தரித்துப் போட்டுவிட்டார்கள். நான் ஒரு முறைதான் சொன்னேன். ஆனால், அதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன ஊடகங்கள். வாலையும், தலையையும் வெட்டிவிட்டால் எதை வேண்டுமானாலும் மாற்றலாம். அப்படித்தான் இந்தப் பேச்சும் மாறியிருக்கிறது.

ஒருமுறை பேசிய என் மீது வழக்கு என்றால். பலதடவை ஒளிபரப்பிய ஊடகங்கள் மீதும் வழக்கு போடவேண்டும் அல்லவா?

என் மீது குற்றம் சொல்கிறீர்க்ள். அதையாவது நம்புவதுபோல் சொல்லுங்களேன். தேர்தல் வெற்றிக்கு ஓர் இனத்தின் ஓட்டு மட்டும் போதுமா? பெரும்பான்மை நோக்கிச் சென்றுவிட்டால் மக்கள் நீதி மய்யத்தில் நீதி போய்விடும் அல்லவா? நான் எங்காவது மதக் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறேனா? நான் பேசியது சரித்திர உண்மை. ஹேராம் படத்தைப் பாருங்கள்.

அந்தப் படம் வந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்டன. அதிலும் நான் இதைத்தான் பேசியிருக்கிறேன். 'தேவர் மகன்' படத்தில் சாதி அடையாளம் சொல்கிறார்கள். ஆனால், இறுதிக் காட்சியில் நான் என்ன சொல்லியிருக்கிறேன். கூடி வாழ வேண்டும் என்பதை நான் எப்போதும் சுட்டிக் காட்டியுள்ளேன். இப்போதும் அதையே சுட்டிக்காட்டுகிறேன்.

என் வீட்டில் உள்ளவர்கள் இந்துக்கள்தான். என் மகள் சாமி கும்பிடுகிறார். அவர்களை நான் துன்புறுத்தமாட்டேன். ஆனால், நான் சொன்ன வரலாற்று உண்மை ஏற்படுத்திய புண் ஆறாது. அது ஆற்றப்பட வேண்டும். அதற்கு கூடி வாழ வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை கூடி வாழ, சகிப்புத்தன்மை தேவையல்ல. ஏற்றுக்கொள்ளும் பக்குவமே தேவை. தலைவலியைச் சகிக்கலாம். சகோதரனை ஏற்க வேண்டும். இன்னொரு மதத்தை, இனத்தைச் சகிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்க வேண்டிய அவசியமே இருக்கிறது. நான் வாக்குக்காக உங்களைக் கும்பிடவில்லை. நான் என்னைத் தலைவனாகவும் ஒருபோதும் பார்க்கவில்லை. தொண்டர்களின் பொடி நான்.

இங்கே மக்கள் முன்னாள் மதச் செருக்கு, சாதிச் செருக்கு எடுபடாது. உண்மையே வெல்லும். அதுவே நான் சொன்ன சரித்திர உண்மை.

இன்று நான் தீவிர அரசியலில் இறங்கியிருக்கிறேன். அதனால் நான் தீவிரமாகத்தான் பேசுவேன். அதில் வன்முறை இல்லை. வார்த்தை ஜாலங்கள் இல்லை. நான் தீவிரவாதி என்றுதான் சொன்னேனே தவிர பயங்கரவாதி, கொலைகாரன் என்றெல்லாம் சொல்லவில்லை.

என் கொள்கைக்கு நேர்மைதான் அடித்தளம். நீங்கள் (மோடி) பொய் சொல்கிறீர்கள். டூப் அடிச்சு ரொம்ப நாள் மக்களை ஏமாற்ற இயலாது. இந்த அரசை வீழ்த்துவோம். வீழ்த்துவோம் என்றால் சுட்டுக் கொல்வோம் என்று அர்த்தமில்லை. ஜனநாயக முறைப்படி தோற்கடிப்போம் என்றே அர்த்தம். என் பேச்சு யாரையும் புண்படுத்தவில்லை. இங்கே நடக்கும் அரசியல்தான் பலரைப் புண்படுத்துகிறது. அரசியல் ஏற்படுத்திய புண்ணை ஆற்ற வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த முறையாவது என் பேச்சை முழுமையாகக் கொண்டு சேருங்கள்.

நான் பேசியது சரித்திர உண்மை. உண்மை கசக்கும். கசப்பே மருந்தாகும். அந்த மருந்தால் வியாதி குணமாகும்" எனப் பேசினார்.

கமல்ஹாசனின் இந்த பிரச்சாரத்தைக் காண மிகக் குறைந்த அளவிலேயே மக்கள் திரண்டிருந்தனர். போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close