[X] Close

ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு


  • kamadenu
  • Posted: 15 May, 2019 16:49 pm
  • அ+ அ-

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணனை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய ஐ.ஜி.யாக வித்ய ஜெயந்த் குல்கர்னியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2018-ம் ஆண்டு கைவிரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடத்திய தேர்வில் ஒரு கேள்விக்கு சரியான விடை எழுதிய தனக்கு மதிப்பெண் வழங்கவில்லை எனக்கூறி, இரண்டாம் நிலை காவலர் அருணாச்சலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் அளித்த விடை சரியா, தவறா என ஆராய ஐஐடி கணித பேராசிரியர் தலைமையில் ஒரு குழு அமைத்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த அறிக்கையும் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கை போலிப் பேராசிரியர் ஒருவரால் தயாரிக்கப்பட்டது என மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார்.

விசாரணையில், அந்த அறிக்கை போலியானது தான் என கண்டுபிடிக்கப்பட்டது. ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன் மூலமாக அந்தப் போலி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதனால் அவர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவிலும் புகார் கொடுக்கப்பட்டு, போலிப் பேராசிரியராக ஆள் மாறாட்டம் செய்த நபரும் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் செந்தாமரைக் கண்ணன் மீது ஏற்கெனவே சர்ச்சை எழுந்த நிலையில், அவரைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டது. அவருக்கு எந்தப் பணியும் வழங்கப்படாமல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். புதிய ஐ.ஜி.யாக வித்ய ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close