[X] Close

கோவையில் 25 இடங்களில் ‘ஸ்மார்ட் மரங்கள்’


smart-trees-in-coimbatore

ஸ்மார்ட் மரம் அமையும் பகுதியின் மாதிரி

  • kamadenu
  • Posted: 28 May, 2018 13:05 pm
  • அ+ அ-

எந்தவொரு பருவகாலத்திலும் தன்மை மாறாத செயற்கை மரங்களை கோவை மாநகரில் இனி ஆங்காங்கே காண முடியும். செயற்கையாக உருவாக்கப்படும் இந்த ‘ஸ்மார்ட் மரங்கள்’ அழகுக்காக மட்டுமல்ல, அழகியலோடு மக்களுக்கு பயன்படும் வசதிகளையும் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம் பெற்றதால் கோவை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சூரியசக்தியை பயன்படுத்துவது, இலவச வைஃபை வசதியை அளிப்பது என்ற நோக்கத்தில் ‘ஸ்மார்ட் இருக்கை’ திட்டம் கொண்டு வரப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்திலேயே இந்த இருக்கை அமைக்கப்பட்டபோதும் அதன் பயன்பாடு அதிகரிக்கவில்லை. இதனால் மக்கள் இளைப்பாறும் இடங்களைப் போல ‘ஸ்மார்ட் மரங்களை’ மாநகராட்சி நிர்வாகம் நிறுவி வருகிறது. முதல்கட்டமாக கோவை வ.உ.சி. பூங்கா நுழைவுவாயிலில் சுமார் 20 அடி உயரத்தில் தத்ரூபமான மரத்தை வல்லுநர்கள் வடிவமைத்து வருகின்றனர். 

இரும்பினாலும், வெளிப்புறத்தில் பைபர் பொருட்களாலும் மரம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதைச் சுற்றிலும் நிழற்கூரைகள் அமைத்து சுமார் 30 பேர் அமர்ந்து இளைப்பாற இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. முக்கிய நோக்கமாக ஸ்மார்ட் மரத்தில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் செல்போன், லேப்டாப் போன்றவற்றுக்கு பயன்படுத்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தவிர, மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க இந்த மரத்தின் மூலம் வைஃபை வசதி வழங்கப்பட உள்ளது. 

மாநகராட்சியுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் ஜே.சி.மீடியா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தினர் கூறும்போது, ‘தங்கநிறத்திலான இலைகள் கொண்டதாக மரம் வடிவமைக்கப்படுகிறது. பின்புலமாக கலைநயம் மிக்க காட்சிகள் வைக்கப்பட உள்ளன. ரூ.12 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்த ‘ஸ்மார்ட் மரம்’ பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தத்ரூபமாக வடிவமைக்க வேண்டும் என்பதால் சினிமா கலை இயக்குநர்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரிரு நாட்களில் வ.உ.சி. மைதானத்தில் ஸ்மார்ட் மரம் பயன்பாட்டுக்கு வரும். இதுதவிர நகரில் 25 இடங்களில் இதுபோன்ற மரங்கள் நிறுவப்பட உள்ளன’ என்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சம்பந்தப்பட்ட நிறுவனமே முழு செலவில் இந்த மரங்களை அமைத்து வருகிறது. அடுத்ததாக கோவையில் காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களிலும், மக்கள் அதிகமாகக் கூடும் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் 25 ஸ்மார்ட் மரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் வ.உ.சி பூங்கா ஸ்மார்ட் மரம் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்’ என்றனர்.


வ.உ.சி பூங்காவில் அமைக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் மரம்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close