[X] Close

பாலைவனமாக மாறிய அமராவதி அணை: பருவமழையால் நிரம்புமா என எதிர்பார்ப்பு


  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:47 am
  • அ+ அ-

நீர்வரத்து இல்லாமல் கடந்த சில மாதங்களாக அமராவதி அணை வறண்ட நிலையில் உள்ளது. பருவமழை பெய்து, அணை நிரம்புமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ளது, அமராவதி அணை. 90அடி உயரமும், 4 டிஎம்சிகொள்ளளவும் உள்ள இந்த அணையால், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55,000 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அமராவதி ஆற்றை, நீர் ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் 40-க்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களால் பல லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் முழுகொள்ளளவை எட்டியதால், அணையின் 9 மதகுகள் வழியாக விநாடிக்கு 6,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அதன்பின் பருவமழை குறைந்ததால், நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்தாண்டு ஜனவரி மாதம் குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரியத்தொடங்கியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இன்றி, நீர் வரத்து இல்லாததால் அணை முற்றிலுமாக வற்றியது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ‘பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சரியான நீர்மேலாண்மைத் திட்டம் இல்லை. கடந்தாண்டு வரலாறு காணாத அளவில் மழை பெய்தும், 20 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்தது. பாசனத் தேவைக்குப்போக எஞ்சிய நீரை அணையில் தொடர்ந்து தேக்கி வைத்திருக்க வேண்டும்.

150 கி.மீ. நீளமுடைய ஆற்றில் ஏராளமான தடுப்பணைகளைக் கட்டியிருந்தால், உபரியாக வெளியேறிய நீர் ஆங்காங்கே சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்திருக்கும். ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லாததால், மழை நீர் வீணாவதைத் தடுக்க முடியவில்லை’ என்றனர்.

பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறும்போது, ‘ஒவ்வோர் ஆண்டும் பருவ மழைக் காலங்களில் அணை நிரம்புவதும், பாசனத்தேவைக்கு விநியோகித்தபின் அணை வறண்டு போவதும் வழக்கம்தான். அணை தூர் வாருதல், தடுப்பணை கட்டுவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க முடியும்’ என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close