[X] Close

நீர்நிலைகள் வறண்டதால் குடிநீருக்காக காடுகளை விட்டு வன விலங்குகள் வெளியேறுவதை தடுக்க தண்ணீர் தொட்டிகள்: தேசிய நெடுஞ்சாலை பகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வனத்துறை திட்டம்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:42 am
  • அ+ அ-

-அ.வேலுச்சாமி

கடும் வெப்பம் மற்றும் நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதால் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக வனவிலங்குகள் காடுகளைவிட்டு வெளியேறுவது அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்ப்பதற்காக வனப்பகுதிகளுக்குள் குடிநீர் தொட்டிகளை அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின் றனர்.

திருச்சி மாவட்டத்தில் துவரங் குறிச்சி, துறையூர், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் மலைக ளும், காப்புக் காடுகளும் உள்ளன. இவற்றில் காட்டெருமைகள், புள்ளி மான்கள், குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளும், மயில்கள் உள்ளிட்ட பறவைகளும் வசித்து வருகின்றன. தற்போது நிலவும் கடுமையான வெப்பத்தின் காரணமாகவும், மழையின்றி நீர்நிலைகள் வறண்டு கிடப்பதாலும் அங்கு வசிக்கக்கூடிய விலங்குகள், பறவைகள் குடிநீரின்றி தவித்து வருகின்றன.

விபத்தில் சிக்கும் விலங்குகள்எனவே, குடிநீர் மற்றும் உணவுத் தேவைக்காக வன விலங்குள் காடுகளை விட்டு வெளியேறி அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களுக்குள் செல்வது வழக்கமாகிவிட்டது. இதுபோன்ற சமயங்களில் பயிர்களை விலங்குகள் நாசம் செய்வதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. மேலும் தடுப்புச்சுவர் இல்லாத கிணறுகளில் தவறி விழுந்தும், சாலைகளை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டும் விலங்குகள் காயமடைகின்றன. அண்மையில், துவரங்குறிச்சி அருகே மலையி லிருந்து வெளியேறிய 15-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள், வெங்கட்நாயக்கன்பட்டி கிராமத்துக்குள் புகுந்தன. அப்போது வறண்ட கிணற்றுக்குள் தவறி விழுந்து ஒரு காட்டெருமை உயிரிழந்தது. இதேபோல மான் களும், மயில்களும் அடிக்கடி விபத் துகளில் சிக்கி உயிரிழக்கின்றன.

தண்ணீர் தொட்டிகள் அமைப்பு

இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதற்காக விலங்குகள், பறவைகள் அதிகம் வசிக்கும் வனப் பகுதிகளில் வனத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, துவரங்குறிச்சி வன சரகப் பகுதியில் வேலமலை, தச்சமலை, பெரியமலை ஆகிய இடங்களிலும், மணப்பாறை வனச் சரகத்தில் புத்தாநத்தம், செம்மலை, கல்பட்டி ஆகிய இடங்களிலும், துறையூர் வனச் சரகத்தில் குறிச்சிமலை, செங்காட்டுப்பட்டி, மண்மலை, சோபனபுரம், வால்கரடு ஆகிய இடங்களிலும் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர மேலும் பல இடங்கள் கண்டறியப்பட்டு, தண்ணீர் தொட் டிகள் அமைக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கடும் வறட்சியால் சிக்கல்

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் மாவட்ட வன அலுவலர் சுஜாதா கூறியதாவது: துவரங்குறிச்சி, மணப்பாறை வனச் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவில் காட்டெருமைகள் உள்ளன. அவை குடிநீருக்காக காடுகளை விட்டு வெளியேறும்போது திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அந்த பகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து தண்ணீர் தொட்டிகளை அமைத்து வருகிறோம். இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்டதால், வனப்பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் பெறுவதில் சிக்கல் உள்ளது. எனவே, வனத்தையொட்டிய பகுதியிலுள்ள சில விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீரைப் பெற்று குழாய்கள் மூலமாகவும், வாகனங்கள் மூலமாகவும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று தொட்டிகளை நிரப்பி வருகிறோம். இதன்மூலம் காட்டெருமைகள் வனத்திலிருந்து வெளியேறுவதை ஓரளவுக்கு தடுக்க முடியும்.

குடியிருப்புகளிலும் குடிநீர் தொட்டி

இதேபோல திருச்சி மற்றும் துறையூர் வன சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புள்ளி மான்கள், குரங்குகள், மயில்கள், முயல்கள், அணில்கள் அதிகளவில் வசிக்கின்றன. இவை அதிக வெப்பத்தை தாங்க முடியாத உயிரினங்கள் என்பதால், காடுகளுக்கு மத்தியில் ஆங்காங்கே சிறிய அளவில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு, 2 நாட்களுக்கு ஒருமுறை நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வன அலுவலர்கள், ஊழியர்களின் குடியிருப்புகளிலும் குடிநீர் தொட்டிகள் வைத்து, 24 மணி நேரமும் நீர் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் நெடுஞ்சாலைகளில் வைக்கப்படுமா?

திருச்சி மாவட்டத்தில் வன விலங்குகள் அதிகமாக உயிரிழப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக மணப்பாறை, துவரங்குறிச்சி வனச் சரகங்கள் உள்ளன. குறிப்பாக திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தச்சமலை, நல்லூர்மலை பகுதிகளிலும், மணப்பாறை- துவரங்குறிச்சி சாலையில் பிள்ளைக்கோயில்பட்டி, எதிர்மேடு, காவல்காரன்பட்டி பகுதிகளிலும் காட்டெருமைகள், மான்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன. ஆனால், இந்த தேசிய, மாநில நெடுஞ்சாலையில் இதுகுறித்த எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள்கூட இதுவரை வைக்கப்படவில்லை. எனவே, இந்தப் பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைப்பதுடன், வனவிலங்குகளின் நலன்கருதி குறைவான வேகத்தில் செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close