[X] Close

இளம் பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் முன்னாள் கவுன்சிலருக்கு ஆயுள் தண்டனை உறுதி


  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:41 am
  • அ+ அ-

இளம் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கும்பகோணம் நகராட்சி முன்னாள் கவுன்சிலருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித். கும்பகோணம் நகராட்சி 42-வது வார்டு முன்னாள் திமுக கவுன்சிலர். இவர் காசிநாதன் என்பவரின் மனைவி சங்கீதா(27) வை கணவர், குழந்தைகளைப் பிரிந்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சங்கீதா மறுத்துள்ளார்.

கடந்த 10.1.2015-ல் மாமனார் வீட்டில் சங்கீதா இருந்தபோது, அங்கு வந்த இந்திரஜித் சங்கீதாவை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த சங்கீதா மீது இந்திரஜித் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

உடல் முழுவதும் எரிந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த சங்கீதா, கணவர் காசிநாதனை கட்டிப்பிடித்துள்ளார். இதில் காசிநாதன் காயமடைந்தார். இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சங்கீதா உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்கு முன்பு நீதித்துறை நடுவரிடம் சங்கீதா அளித்த மரண வாக்குமூலத்தில், தன் மீது இந்திரஜித் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து கும்பகோணம் மேற்கு போலீஸார் இந்திரஜித்தை கைது செய்தனர்.

இந்த வழக்கில் இந்திரஜித் துக்கு ஆயுள் தண்டனை வழங்கி தஞ்சாவூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 1.2.2016-ல் தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரி இந்திரஜித் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.

இந்திரஜித் தரப்பில், காசிநாதன் தான் சங்கீதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். சங்கீதாவை இந்திரஜித் காப்பாற்ற முயன்றார். ஆனால், சங்கீதாவை எரித்துக் கொலை செய்ததாக இந்திரஜித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கீதாவிடம் மரண வாக்குமூலம் வாங்கியதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சங்கீதா அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டபோது, அவர் மரண வாக்குமூலம் அளிக்கத் தகுதியான நினைவுடன் இருப்பதாக மருத்துவர் சான்று அளித்துள்ளார். அதன் பிறகே நீதித்துறை நடுவர் மரண வாக்குமூலம் பெற்றுள்ளார். அதில் எந்த முரண்பாடுகளும் இல்லை. சங்கீதா மீது இந்திரஜித் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர். இதனால் மனுதாரர் தரப்பு கூறுவதை ஏற்க முடியாது. மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close