[X] Close

மானை நோக்கி பாயும் தோட்டா...


  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:38 am
  • அ+ அ-

-எஸ்.கோபு

இயற்கையின் படைப்புகளில் மானும், மயிலும் அழகின் சிகரங்கள். இவற்றை ரசிக்கும் அதேவேளையில்,  கொம்புகளுக்காக மானும்,  இறகுகளுக்காக மயில்களும் வேட்டையாடப்படுவது வேதனைக்குரிய முரண்பாடு. பல்வேறு தடைகளைத் தாண்டியும், சட்டத்தை மீறியும் மான்களை நோக்கி துப்பாக்கித் தோட்டக்கள் பாய்வது, இன்னும் நிற்கவில்லை.

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் எழில்கொஞ்சும் பகுதி பொள்ளாச்சி. இங்கு அமைந்துள்ள  ஆனைமலை புலிகள் காப்பகம் ஏறத்தாழ  958  சதுரகிலோமீட்டர் பரப்பு கொண்டது. பொள்ளாச்சி, வால்பாறை, மானம்பள்ளி, உலாந்தி, உடுமலை, அமராவதி ஆகிய வனச் சரகங்களை உள்ளடக்கியது இந்தப் பகுதி.

இங்கு அரிய வகை விலங்குகளான  குரைக்கும் மான், கடமான், புள்ளி மான், சருகுமான், வரையாடுகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும்  பறக்கும் பல்லியோந்திகள்,  இருவாச்சி, சிங்கவால் குரங்கு, மலபார் அணில்,  புலிகள்  உள்ளிட்ட பல அரிய வகை உயிரினங்கள் இருப்பதைக்  கண்டறிந்த மத்திய அரசு,   2008-ல் இதை  ஆனைமலை புலிகள் காப்பகமாக  அறிவித்தது.

12 ஆயிரம் ஹெக்டேர் வனச் சரகம்! 

சுமார்  12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பொள்ளாச்சி வனச் சரகத்தில் உருவாகி,  பல கிலோமீட்டர் தொலைவுக்குச்  செல்லும்  புங்கன் ஓடை, வன விலங்குகளின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதால்,  போத்தமடை வனச் சுற்றுப் பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு கிடைக்கும்  புளியம்பழம், காரைச்செடி, கரக்கட்டான் மரத்தின் காய்கள், பழங்கள், பசுந்தாவரங்கள் ஆகியவை  மான்களின் உணவாக உள்ளன.

கோடைகாலத்தில் புங்கன் ஓடையில் நீர்வரத்து குறைந்து விடுவதால்,  மான், யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளுக்குத் தண்ணீர்ப்  பற்றாக்குறை ஏற்படுகிறது.  தேவையான தண்ணீர் மற்றும் பசுந்தீவனம் கிடைக்காமல், அவை வனத்தை ஒட்டியுள்ள  பட்டா நிலம் மற்றும் விவசாயத் தோட்டங்களில் கூட்டமாக நுழைகின்றன. இதனால் மனித-விலங்கு மோதல் ஏற்படுகிறது.

மான் வேட்டை!

வனப் பகுதியில் உணவையும், தண்ணீரையும் தேடி அலைந்து பலவீனமடையும் மான்கள், தண்ணீரைத் தேடிச் செல்லும்போது  சில நேரத்தில்  வனத்துக்கு அருகில் உள்ள கிணறுகளில் விழுந்து,  உள்ளே சிக்கிக் கொள்ளும்.  இதையறியும் வேட்டைக் கும்பல் இரவோடு இரவாக அந்த மான்களை வேட்டையாடுகின்றனர்.

மேலும்,  வேட்டைக்காரர்கள்  மான்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, அவை தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் வழித் தடங்களைத் தேர்வு செய்து, வலை மற்றும்  கம்பியால் சுருக்கு வைக்கின்றனர். சுருக்கில் சிக்கிய மான், அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும். சுருக்கில் சிக்கிய மானின் தலை வெட்டியெடுக்கப்பட்டு, கொம்புகள்  திருடப்படுகின்றன.  பின்னர் மானின் உடல் கூறுபோடப்பட்டு, அதன் இறைச்சி செமணாம்பதி வழியாக கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

மான் இறைச்சி கிலோ ரூ.1,500?

வேட்டையாடப்பட்ட மானின் இறைச்சி கேரளாவில் கிலோ ரூ.300 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. சுமார் ஒன்று  அல்லது 2 வயதுள்ள, வேட்டையாடப்பட்ட மானின் இறைச்சி ரூ.1,500-க்கும், வயது முதிர்ந்த மானின் இறைச்சி ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில்  வன வேட்டையர்கள் அதிகமாக இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக அங்கு மாவோயிஸ்ட்கள்  நடமாட்டம் அதிகரித்ததால்,  வனப் பகுதி முழுவதும் வனத் துறை மற்றும் அதிரடிப்படையின் கண்காணிப்பின்கீழ் கொண்டு வரப்பட்டது.   இதனால் கேரளாவைச் சேர்ந்த  வேட்டைக் கும்பலின் கவனம், தமிழக எல்லையில் உள்ள செமணாம்பதி வனப் பகுதி பக்கம் திரும்பியது.  இந்த வனப் பகுதிக்கு  அருகில் உள்ள குக்கிராமங்களில் வசிப்போருடன்,  வன வேட்டையர்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, வன வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நாட்டுத் துப்பாக்கி தொழிற்சாலை!

தமிழக-கேரளா வன எல்லையில் உள்ள செமணாம்பதி கிராமத்துக்கு உட்பட்ட செம்மேடு பகுதியில், பாலகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டருகே பட்டறை அமைத்து, நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து வந்துள்ளார். இந்த துப்பாக்கி தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள வன விலங்கு வேட்டையர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், போத்தமடை வனப் பகுதியில் வேட்டையாடப்படும் மான் இறைச்சி, கேரளாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வனத் துறையின் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொள்ளாச்சி வனச் சரகர் காசிலிங்கம் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் நடத்திய சோதனையில், நவீன ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் 7.6 ரக தோட்டாக்கள் 80,  நாட்டுத் துப்பாக்கி, வெடி மருந்துகள், பாதி தயாரித்த நிலையில்

இருந்த இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், அதற்கான வெடிமருந்துகள், முயல் வேட்டைக்குப்  பயன்படுத்தும் ஏர்கன் துப்பாக்கியின்  ரவைகள், டபுள் பேரல் துப்பாக்கியின்  24 தோட்டாக்கள்,  பயன்படுத்திய தோட்டாக்கள், ரத்தக்கறை படிந்த கத்திகள், நெற்றியில் பொருத்தக்கூடிய  டார்ச் லைட்டுகள், துப்பாக்கி தயாரிக்கப்  பயன்படுத்திய கருவிகள்  உள்ளிட்டவை குவியல் குவியலாக இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த வனத் துறையினர், கேரள வேட்டைக் கும்பலைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்தனர்.

இது தொடர்பாக  வன உயிரின ஆர்வலர்கள் கூறும்போது, “ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கேரளா மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான கடமான், புள்ளி மான், சருகுமான், குரைக்கும் மான் உள்ளிட்ட அரிய வகை மான் இனங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள புங்கன் ஓடைப் பகுதியில் அதிக அளவில் மான்கள் நடமாட்டம் உள்ளது.  கோடைகாலத்தில் இந்த ஓடையில் நீர்வரத்து குறையும்போது, மான், சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள்,  அருகில் உள்ள கிணறு, குட்டை ஆகிய நீர்நிலைகளைத் தேடிச் செல்கின்றன. இவ்வாறு வனத்தை விட்டு வெளியே வரும் விலங்குகளைக் கண்காணிக்கும் வேட்டைக்கும்பல்,  மான் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.  இறைச்சிக்காக மான்களை வேட்டையாடி வந்த இந்தக் கும்பல், தற்போது மான் கொம்புகளுக்கு சந்தையில் மதிப்பு கூடி வருவதால்,  அதன் கொம்புகளுக்காவும் வேட்டையாடும் நிலை அதிகரித்துள்ளது.

கடும் நடவடிக்கை அவசியம்...

புள்ளி மான்களை துப்பாக்கியால் சுட்டும்,  பட்டா நிலங்களுக்கு அருகே உள்ள வனப் பகுதியில் வலைகளைக் கட்டியும், கம்பிகளால் சுருக்கு வைத்தும் அவற்றை வேட்டையாடி வருகின்றனர். இந்த வேட்டையில் தமிழகத்தைச்  சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கேரள மாநிலத்தைச்  சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட வன உயிரினமான மான்களைக் காக்க, வேட்டையில் ஈடுபடுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டியுள்ள கேரள மாநில வனப் பகுதிகளை, அம்மாநில அரசு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவித்துள்ளது. அங்கு வேட்டையில் ஈடுபடுவோர், கடும் சட்டங்கள் மூலம் தண்டிக்கப்படுகிறார்கள். எனவேதான், அவர்கள் தமிழக வனப் பகுதியில்  வேட்டையாடி வருகிறார்கள்.

தமிழக வனப் பகுதியில் வேட்டையில் ஈடுபடுவோர் மீது கடும் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, உரிய தண்டனை பெற்றுத்  தருவதன் மூலம்,  ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புள்ளி மான்களையும், அரிய வகை  உயிரினங்களையும் காப்பாற்றலாம்” என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close