[X] Close

‘போலீஸ்-இ-ஐ’ செயலி புகார்களுக்கு வீடுகளுக்கு சென்று அபராதம் வசூலிக்கும் பணியால் போலீஸார் மன உளைச்சல்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:29 am
  • அ+ அ-

-டி.ஜி.ரகுபதி

காவல்துறை மின்னணு கண் (Police-e-eye) செயலி மூலம் வரும் புகார்களுக்கு ரசீது விநியோகித்து அபராதம் வசூலிக்கும் முறையால் மன உளைச்சல் ஏற்படுவதாக போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகர காவல்துறை சார்பில், கடந்த ஜனவரி மாதம் ‘‘காவல்துறை மின்னணு கண்’’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் ஏராளமான புகார்களை பெறும் போக்குவரத்து போலீஸார், விதிமீறலுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநருக்கு அபராதம் விதித்து ரசீது எழுதுகின்றனர். வட்டார போக்குவரத்துறை உதவியுடன் விதிமீறலில் ஈடுபட்ட அந்த வாகன ஓட்டுநரின் முகவரியை கண்டறிந்து போக்குவரத்து போலீஸார் அந்த ரசீதை வழங்கி அபராதத்தை வசூலிக்கின்றனர். இந்த ரசீது வழங்கும் முறையால் பணிச்சுமை அதிகரிப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து போலீஸார் சிலர் கூறியதாவது: போக்குவரத்து போலீஸாருக்கு இரண்டு ஷிப்டு களாக 8 மணி நேரம் பணி ஒதுக்கப்படுகிறது. செயலி மூலம் பெறப்படும் புகார்கள் தொடர்பான ரசீதுகளை வழங்க, ஒவ்வொரு போக்குவரத்து காவல் நிலையத்திலும் ஒரு காவலர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ரசீதை சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரின் முகவரிக்கு சென்று நேரில் அளித்து, அபராத தொகையை வசூலித்து வந்தனர். இந்த ரசீதை பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸாரும் வழங்கும் வகையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பணியில் இருக்கும் போக்கு வரத்து போலீஸார், பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது, குறைந்தபட்சம் 4 ரசீதுகளை விநியோகித்து அபராதம் வசூலிக்க வலியுறுத்தப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக இந்த முறை அமலில் உள்ளது. பல மணி நேரம் வெயிலில் நின்று போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் போலீஸார், ஓய்வெடுக்கும் நேரத்தில் அபராத ரசீதை எடுத்துக் கொண்டு முகவரி தேடி அலைந்து, சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்து தொகையை வசூலிப்பதால் ஓய்வு நேரம் விரயமாகிறது. சம்பந்தப்பட்டவரின் முகவரி மாறியிருந்தால், புதிய முகவரி யை கண்டுபிடித்து ரசீதை ஒப்படைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

இதனால், ஓய்வு எடுக்க முடியாமல் பணியில் ஈடுபட வேண்டிய சூழல் போலீஸாருக்கு ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போகிறது. சிலரை தவிர, பெரும்பாலான போக்குவரத்து போலீஸார் அரசு வாகனம் இல்லாமல், அவர்களது சொந்த வாகனத்தை தான் அலுவல் பணிக்கு பயன்படுத்துகின்றனர். இச்சூழலில் ரசீது கொடுக்கும் பணியின் காரணமாக, கூடுதலாக தங்களது சொந்த செலவில், பெட்ரோல் போட்டு அலுவல் பணிக்கு வாகனங்களை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ரசீது வழங்குவதற்கு உரிய ‘அலவன்ஸ்’ போக்குவரத்து போலீஸாருக்கு கிடைப்பதில்லை.

இந்த புதிய முறையால் போக்குவரத்து போலீஸாருக்கு பணிச்சுமை ஏற்படுவதோடு, மன உளைச்சலும் ஏற்பட்டு, போக்கு வரத்து பணியை பாதிக்கிறது. ரசீது வழங்கும் பணிக்கு தனியாக போலீஸாரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் (மேற்கு பகுதி) ராஜ்கண்ணன் கூறும் போது,‘‘நேற்றைய நிலவரப்படி இந்த செயலி மூலம் சாலை விதிகளை மீறியதாக 14,675 புகார்கள் வந்துள்ளன. இதில் 3,920 புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.21.43 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமீறல் தொடர்பான ரசீதுகளை பணி முடித்து செல்லும் போலீஸார் கொண்டு சென்று அளிக்கின்றனர். தொலைவில் உள்ள இடங்களுக்கு அனுப்பப்படுவதில்லை. அருகில் உள்ள இடங்களுக்கே அனுப்பப்படுகின்றனர்’’ என்றார்.

மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் பெருமாள் கூறும் போது,‘‘ இந்த விவகாரம் தொடர்பாக எனது கவனத்துக்கு வரவில்லை. விசாரித்து விட்டு பதில் தெரிவிக்கிறேன்’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close