[X] Close
 

ராஜபாளையம் அய்யனார்கோயில் பகுதிக்கு படையெடுத்து வரும் பட்டாம்பூச்சி இனங்கள்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி


rajapalayam-butterfly

  • kamadenu
  • Posted: 28 May, 2018 12:15 pm
  • அ+ அ-

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அய்யனார் கோயில் பகுதியில் ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சி இனங்கள் படையெடுத்து வரத் தொடங்கி உள்ளன.

பறவைகள் ஆர்வலர்கள் இணைந்து தொடங்கிய "ரோர்" (ராபாலோசெரா மற்றும் ஓடோனாடா அசோசியேஷன், ராஜபாளையம்) அமைப்பின் 3-வது ஆண்டு நிறைவு மற்றும் அக்குழுவினரின் பட்டாம்பூச்சி காணல் ராஜபாளையத்தில் நடைபெற்றது. 

இதுகுறித்து, ரோர் அமைப்பைச் சேர்ந்த பட்டாம்பூச்சி ஆர்வலர் சரண் உள்ளிட்டோர் கூறியதாவது: "ரோர்" அமைப்பு தும்பிகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் போன்ற குறைந்த அளவில் அறியப்பட்ட பறக்கும் தேவதைகளை பாதுகாப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உருவாக்கப்பட்டது.

சதர்ன் பேர்டுவிங்

எங்கள் குழுவினர் பட்டாம் பூச்சிகளின் முக்கிய வாழிடமாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அய்யனார்கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்தியாவின் மிகப் பெரிய பட்டாம்பூச்சியான "சதர்ன் பேர்டுவிங்" எங்களை வரவேற்றதால் மிகுந்த ஆச்சரியம் அடைந்தோம். நூற்றுக்கணக்கான சிறிய அளவில் உள்ள டினிகிராஸ் புளூ பட்டாம்பூச்சிகள் காடு முழுவதும் காணப்பட்டன.

68 வகை பட்டாம்பூச்சிகள் வருகை

அதனுடன் காமன் கிராஸ் எல்லோ, ஒன் ஸ்பார்ட் கிராஸ் எல்லோ போன்ற இனங்களும் அதிக அளவில் காணப்பட்டன. மற்ற சுவாரசியமான இனங்கள் சாக்லேட் அல்பட்ராஸ், டேனிராஜா, பர்பிள் லீப்புளூ, புளூ அட்மிரல், டபுள் பேண்டடு ஜூடி, பாரோனெட் போன்ற பட்டாம் பூச்சி இனங்களும் அதிகம் காணப்பட்டன.

மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் காணப்படும் கிளாடி புஷ்புரோன், மலபார் ராவன் போன்ற பட்டாம் பூச்சி இனங்களையும் காண முடிந்தது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக பட்டாம் பூச்சிகள் அதிமாக படையெடுத்து வந்துள்ளன. இப்பகுதியில் 68 வகையான பட்டாம் பூச்சி இனங்களைக் காணமுடிந்தது. இது நல்ல பருவத்துக்கான அறிகுறி என்றார்.

மேலும், இதுவரை 221 பட்டாம்பூச்சி இனங்களை இக்குழு பார்த்து ஆவணப்படுத்தியுள்ளதாகவும் சரண் தெரிவித்தார்.

- இ. மணிகண்டன்

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close