[X] Close

மாதிரி வாக்கு எண்ணும் மையம் உருவாக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி: தபால் வாக்குகளை மின்னணு முறையில் மாற்றும் புதியமுறை அமல்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:43 am
  • அ+ அ-

தூதரக அதிகாரிகள், ராணுவத்தினர் அளிக்கும் தபால் வாக்குகளை மின்னணு முறையில் மாற்றுவது உள்ளிட்ட வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் குறித்து அனைத்து மாவட்ட முன்னோடி அலுவலர்கள், ஐடி பிரிவு அலுவலர்களுக்கு சென்னையில் நேற்று பயிற்சி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு மற்றும் விவிபாட் இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப் பட்டுள்ள 45 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை அலுவலர் களுக்கு முழுமையான பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்அடிப்படையில், சென்னை மாநக ராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா அரங்கில் மாதிரி வாக்கு எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர்கள், தபால் வாக்குகளை மின்னணு முறையில் மாற்றும் முறையை கையாளும் முன்னோடி அலு வலர்கள், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு அலுவலர்கள், மாவட்ட கணினி இயக்குபவர்கள் ஆகியோருக்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி முகாமில், இணை தலைமை தேர்தல் அதிகாரி தீபக்ஜேக்கப், மாநகராட்சி துணை ஆணையர், மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் எம்.கோவிந்தராவ் ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சி முகாமில் வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றுவோர், ராணுவம், மாநிலத்துக்கு வெளியில் பணியாற்றும் உயர் அலுவலர்கள் போன்றோர் வாக்களித்த தபால் வாக்குகளை மின்னணு முறையில் மாற்றுவதற்கான புதிய நடைமுறையை செயல்படுத்துவது குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் 150-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

3 மாநில தேர்தல் அதிகாரிகள் சென்னையில் இன்று ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து 3 மாநில தேர்தல் அதிகாரிகளுடன், துணை தேர்தல் ஆணையர்கள் சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இதன்படி தமிழகம், கேரளா, குஜராத் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரேதசங்களில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் சென்னையில் இன்று நடக்கிறது. துணை தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, சுதீப் ஜெயின் ஆகியோர் பங்கேற்று வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பான பயிற்சிகளை வழங்குகின்றனர். பயிற்சி முகாமில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா மற்றும் 3 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். ஆய்வுக் கூட்டத்துக்குப்பின் அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிடுகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close