[X] Close

விருத்தாசலம் மாணவி கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி தந்தை மனு: விசாரணை நியாயமாக இல்லை என குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:38 am
  • அ+ அ-

விருத்தாசலம் கல்லூரி மாணவி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த டி.பவழங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி சுந்தரமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எனக்கு 2 மகள்கள். முதல் மகள் திவ்யபிரியா ஏற்கெனவே இறந்துவிட்டார். 2-வது மகள் திலகவதி தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்துவந்தார். நானும், மனைவியும் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் என்பவர், வீட்டில் தனியாக இருந்த என் மகள் திலகவதியை கத்தியால் குத்தியுள்ளார். தகவல் கிடைத்து வந்த என் உறவினர் மகேந்திரன், அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் என் மகள் இறந்துவிட்டார்.

இதுதொடர்பாக ஆகாஷை கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

என் மகள் கொலையில் போலீஸார் சுதந்திரமாக, நியாயமாக விசாரணை நடத்தவில்லை. விசாரணை, குற்றவாளிக்கு சாதகமாக செல்கிறதோ என்ற அச்சம் உள்ளது. விசாரணை அதிகாரியும் குற்றவாளிக்கு சாதகமாக செயல்படுகிறார். சாட்சிகள் மிரட்டப்படுகின்றனர்.

சம்பவம் நடந்தபோது, அடையாளம் தெரியாத மேலும் 2 பேர் அங்கு இருந்துள்ளனர். அவர்கள் பற்றி போலீஸார் இதுவரை விசாரணை நடத்தவில்லை. உண்மையை மூடி மறைத்து, காதல் விவகாரம் என வழக்கை முடிக்கப் பார்க்கின்றனர்.

இந்த வழக்கை உள்ளூர் போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, வழக்கை கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் விசாரிக்க தடை விதிக்க வேண்டும். அத்துடன் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி அல்லது சுதந்திரமான அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இழப்பீடு வழங்க கோரிக்கை

மகளை இழந்து பாதிக்கப்பட்ட என் குடும்பத்துக்கு தமிழக அரசு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை. எனவே, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க உத்தரவிட வேண்டும். தவிர, இதுவரை நடந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியுள்ளார். கோடை கால சிறப்பு அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close