[X] Close

பாஜக தலைவர் தமிழிசை தோல்வி பயத்தில் பேசுகிறார்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:36 am
  • அ+ அ-

தமிழகத்தில் பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டதால் அச்சத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசி வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த2 நாட்களாக மிகவும் மனச்சோர்வுடன் காணப்படுகிறார். தமிழகத்தில் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு முழுமையாக அவர்களுக்கு இல்லை என்பது தெரிந்தவுடன் எங்களை மிகவும் கடுமையாக சாடுகிறார். இருந்தாலும் ஒரு சகோதரியின் விமர்சனமாகவே நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,பிரதமர் மோடியிடம் கூட்டணி பற்றி பேசியதாக கூறியிருக்கிறார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பதுபோல, தமிழிசை மிகுந்த அச்சத்துடன் காணப்படுகிறார். மம்தா பானர்ஜியிடம் இரண்டு முறை பேசுவதற்காக மோடி முயற்சி செய்தார். ஆனால், மம்தா பேச விரும்பவில்லை. மே 23-ம் தேதிக்கு பிறகு புதிய பிரதமர் வருகிறார், அவருடன் பேசிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். ஒரு மாநில முதல்வரான மம்தாவே மோடியிடம் பேச விரும்பாதபோது, திமுக தலைவர் ஸ்டாலின் மோடியிடம் என்ன பேசப் போகிறார். இப்படியெல்லாம் மோடிக்கு ஒரு பெருமையை சேர்க்க தமிழிசை முயற்சிக்க வேண்டாம்.

கோட்சே பற்றி கமல்ஹாசன் சொன்னதற்காக அதிமுக அமைச்சர் ஒருவர் நாக்கை அறுத்து விடுவேன் என்று சொல்கிறார். இதைவிட ஒரு வன்முறையே இருக்க முடியாது. நீதிமன்றம் தாமாகவே அவர் மீது ஒரு வழக்கை பதிவு செய்து விசாரிக்கலாம். கோட்சே ஒரு கொலைகாரர், தீவிரவாதி என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அவர் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றபோது ஓர் இந்து அமைப்பில் உறுப்பினராக இருந்தார். எப்படி இந்து சமூகத்தில் மகாத்மா காந்தி ஓர் அகிம்சைவாதியாக, வன்முறை எதிர்ப்பாளராக இருந்தாரோ, அதேபோல, அந்த இந்து சமூகத்தில் கோட்சே ஒரு வன்முறையாளராக, கொலைகாரராக, தீவிரவாதியாக இருந்தார் என்பதே உண்மை.

கமல்ஹாசன் சொன்னது இந்து மதத்துக்கு எதிரான வார்த்தைகள் அல்ல. கமல்ஹாசன் துவக்கி வைத்த இந்த விவாதம் வரவேற்கக் கூடியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close