[X] Close

நாயை நீரில் மூழ்கடித்து கொன்ற கொடூர நபர்; வேடிக்கைப்பார்த்த அக்கம்பக்கத்தினர்: சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ


  • kamadenu
  • Posted: 14 May, 2019 21:11 pm
  • அ+ அ-

சென்னை புளியந்தோப்பில் நாயின் கால்களை கட்டி இழுத்துச் சென்று நீரில் மூழ்கடித்து கொல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானதை அடுத்து கொடூர நபரை போலீஸார் கைது செய்தனர்.

சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக  ஒரு காணொலி மற்றும் சில புகைப்படங்கள் வைரலானது. இந்த கொடூர நபரை எங்குப்பார்த்தாலும் பிடித்துக்கொடுங்கள் என ஆவேசமாக பலரும் பதிவிட்டிருந்தனர்.

அந்தக் காணொலியில் லுங்கி பச்சைக்கலர் பனியன் அணிந்த ஒரு நபர் நாயை அடித்து, அதன் கால்களைக் கட்டி சாலையில் இழுத்து செல்கிறார். அதை சாதாரண நிகழ்வாக பார்த்துக்கொண்டே பொதுமக்கள் கடந்துச் செல்கின்றனர். யாரும் அதை தட்டிக்கேட்கவில்லை.

சாலையில் இழுத்துச் சென்று பின்னர் அந்த நாயை  ஒரு  கழிவு நீர் கால்வாயில் வீசி எறிகிறார். கால்கள் கட்டப்பட்டதால் தப்பிக்க முடியாத அந்த நாய் கழிவுநீரில்  மூழ்கி துடிக்கதுடிக்க  உயிரிழக்கிறது. இதை உடனிருந்த ஒரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார்.

தண்ணீருக்குள் மூழ்கி நாய் உயிரிழக்கும் காணொலியைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர். நாயைக்கொன்ற கொடூர சம்பவத்தை செய்த நபர் மீது காணொலியில் பதிவான காட்சிகளை வைத்து சிலர் இடத்தை கண்டுபிடித்தனர்.

அது சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியில்  நடந்த சம்பவம் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போரூரை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மகாதேவன் என்பவர்,  இந்த சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் முறைப்படி புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வண்ணாரபேட்டை காவல்நிலைய போலீஸார் ஐபிசி 428, 11(1)(0) (மிருக வதைதடுப்பு சட்டம்) கீழ் வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.  மேலும்  நாயை கொடூரமாக கொன்ற அந்த நபர் யார் என்பதையும்  கண்டுபிடித்தனர். நாயைக்கொன்ற கொடூர நபர் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பதும், மது போதையில் இந்தச்செயலை செய்ததும் தெரியவந்தது.

அவரைக்கைது செய்த போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் மிருகங்களை இதுபோன்று வதை செய்பவர்களுக்கு எதிராக அப்பகுதியில் கடந்துச் செல்லும் நபர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். அல்லது உடனடியாக 100-க்கு போன் செய்யலாம் வாயில்லா ஜீவன்கள் வதைபடுவதை பொதுமக்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close