[X] Close

பாஜகவுடன் கூட்டணி பேசுவதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார்: மோடி, தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 17:30 pm
  • அ+ அ-

மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார். நிரூபிக்கத் தவறினால் மோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.

திமுக, காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள நிலையில் சந்திரசேகர ராவிடம் நேற்று ஸ்டாலின் சந்திப்பு நிகழ்த்தியது சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த தமிழிசை, ''திமுகவினர் நம்பகத்தன்மை இல்லாதவர்கள். ஒருபுறம் காங்கிரஸுடன் கூட்டணி எனச் சொல்லிக்கொண்டே எங்கள் ஆட்களுடனும் பேசுகிறார்கள்'' என தெரிவித்தார்.

ஒரு கட்சியின் மாநிலத் தலைவரே தமது கட்சித் தலைவர்களுடன் திமுக கூட்டணிக்காகப் பேசுகிறது என்று கூறியது தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், '' 'மோடியுடனும் ஸ்டாலின் பேசி வருகிறார்.  பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார்' என்று பச்சைப் பொய் நிறைந்த ஒரு பேட்டியை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோல்வியின் விளிம்பிற்குச் சென்றுவிட்ட பாஜகவுக்கு இதுபோன்று குழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. ஆனால் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை சவுந்தரராஜன் இப்படியொரு பொய்யான பேட்டியை அளிப்பதற்காக தன்னை இந்த அளவிற்கு தரம் தாழ்த்திக் கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது திமுகதான். அதே நேரத்தில் ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை அளித்த பிரதமர் நரேந்திர மோடியை முதன்முதலில்  விமர்சித்தது மட்டுமின்றி, ''மீண்டும் இந்தியாவின் பிரதமராக  நரேந்திர மோடி வரவே கூடாது'' என்று சென்னையில் மட்டுமல்ல - கொல்கத்தாவிலும், டெல்லிலும் மாறி மாறி பிரச்சாரம் செய்தவனும் அடியேன்தான்.

தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியிலும் அதே பிரச்சாரத்தை செய்திருக்கிறேன். நடைபெறவிருக்கின்ற நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் மே 23-ம் தேதியுடன் பிரதமர் மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் பேசி வருகிறேன்.

இதைப் பொறுக்க முடியாத பாஜக மேலிடத் தலைவர்கள் கடைந்தெடுத்த அரசியல் கயமைத்தனம் மூலம் அதிமுகவை மிரட்டி கூட்டணி வைத்தது போல், இட்டுக்கட்டிய பேட்டிகளை கற்பனைக் குதிரைகள் போல் தட்டி விட்டு திமுகவை வம்புக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள்.

திமுகவின் வெற்றியும், அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியும் அந்த அளவிற்கு பாஜகவை மிரட்டி விட்டது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மேலிடப் பாஜக தலைவர்களின் சுயநலனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடைசிக்கட்டமாக பகடைக்காயாக ஆக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இப்போது முதன்முதலாக என்னை வந்து பார்க்கவில்லை. இதற்கு முன்பும் வந்து சந்தித்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்த முறை அவர் சந்தித்து விட்டுச் சென்றவுடனையே 'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்று திமுக தலைமைக் கழகத்திலிருந்து தெளிவான பத்திரிகைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குழப்பவாதிகள் அப்போதாவது குறிப்பறிந்திருக்க வேண்டும். ஆனாலும் மரியாதை நிமித்தமான சந்திப்பிற்கு காது மூக்கு வைத்து, பூச்சூடி பொட்டு வைத்து வெளியில் விட்டால் திமுகவிற்கு விழும் சிறுபான்மையின வாக்குகளை இந்த நான்கு இடைத்தேர்தல்களில் தடுத்து விடலாம்- சிதறடித்து விடலாம் என்றும், மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவிருக்கின்ற நிலையில் ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்திய திமுகவின் பிரச்சாரத்தை முனை மழுங்கச் செய்து விடலாம் என்றும் தப்புக் கணக்குப் போட்டு தமிழிசை இந்தப் பேட்டியை திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதை தமிழிசை சவுந்தரராஜன் வழி மொழிந்திருக்கிறார் என்றால் ஊழல் அதிமுகவை எப்படியாவது இந்த நான்கு இடைத் தேர்தலிலாவது தோல்வியடைய விட்டுவிடக் கூடாது என்று போகாத ஊருக்கு பொய்யான வழி தேடியிருக்கிறார்.

“உனக்கு நான்”, “எனக்கு நீ” என்று ஊழல் அதிமுகவும், மதவாத பாஜகவும் கச்சை கட்டிக் கொண்டு “திமுக தலைமையிலான” கொள்கைக் கூட்டணிக் குளத்தில் கல் எறியும் இந்த முயற்சி படு தோல்வியடையும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக, “அதிமுக- பாஜக” போல் திரைமறைவில் “தரகு”பேசும் கட்சியல்ல. கொள்கையை பகிரங்கமாக அறிவித்து- யார் பிரதமர் என்பதை முன்கூட்டியே மக்களிடம் எடுத்துக் கூறி- யார் பிரதமராகக் கூடாது என்பதை இன்னும் தெளிவாக எடுத்துரைத்து தேர்தலைச் சந்தித்து வருகின்ற கட்சி. அந்த வகையில்தான் இந்த மக்களவைத் தேர்தலையும் திமுக சந்தித்துள்ளது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது என்பதிலும் திமுக உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதிலும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதிலும் அதைவிட இரட்டிப்பு மடங்கு உறுதியுடன் இருக்கிறது.

ஆகவே, திமுக தலைவராகப் பொறுப்பேற்ற போது நான் உறுதியளித்தது போல், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசை மே 23-ம் தேதிக்குப் பிறகு மாற்றிக் காட்டுவோம்! முதுகெலும்பில்லாத இந்த அதிமுக அரசைத் தூக்கியெறிவோம்.

தமிழிசை சவுந்தரராஜனோ அல்லது அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படும் நரேந்திர மோடியோ “மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன்.

அப்படி இருவரும் நிரூபிக்கத் தவறினால் நரேந்திர மோடியும், மாநில பாஜகத லைவராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?” என்று ஸ்டாலின் கேட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close