[X] Close

ஒருநாள் அல்ல, 2 நாள் போச்சு; கமல்ஹாசன் பிரச்சாரம் ரத்து: நாளை திருப்பரங்குன்றம் வருவாரா?


2

  • kamadenu
  • Posted: 14 May, 2019 17:11 pm
  • அ+ அ-

ஒருநாள் பிரச்சாரத்தில் பேசிய சர்ச்சைப் பேச்சுக்கு வந்த எதிர்ப்பால் அடுத்தடுத்த 2 நாட்களுக்கு தனது பிரச்சாரத்தை ரத்து செய்யும் சூழ்நிலைக்கு கமல் தள்ளப்பட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி அனைத்து மக்களவைத் தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தினார். 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.

அரசியல் களத்தில் கமல்ஹாசன் குதித்த பின்னர் அவரை பாஜகவினரும், அதிமுகவினரும் குறிப்பாக அமைச்சர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கமல்ஹாசனுக்கு நகர்ப்புற இளம் வாக்காளர்களை ஈர்த்துள்ளார் என்றும், வெற்றி பெறமாட்டார் என்றாலும் சேதாரத்தை ஏற்படுத்தி பிற கட்சிகளின் வெற்றியைத் தடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது. உளவுத்துறை அறிக்கையும் கமல் மீதான கவன ஈர்ப்பை உறுதிப்படுத்தியதாகத் தகவல் கசிந்தது.

இதனால் கமல் மீதான விமர்சனம் கடுமையாக வைக்கப்படுகிறது. அதேநேரம் கமல்ஹாசன் பேச்சு வரைமுறை தாண்டாமல் இருந்தாலும் சில இடங்களில் அவரது விமர்சனம் எதிர்க்கட்சிகளை ஆவேசப்படுத்துகிறது.

இதில் ஒரு விமர்சனம்தான் அரவக்குறிச்சி வேட்பாளரை ஆதரித்து கமல் பேசிய பேச்சு. ''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என்கிற இந்து'' என்ற கமல்ஹாசனின் பேச்சால் சர்ச்சை எழுந்தது. இந்துக்களை விமர்சித்தார் என எதிர் தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறம் தி.க., காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவர் பேசியது சரிதான் என தெரிவித்துள்ளன. இந்து அமைப்புகளைவிட அதிகமாக கோபப்பட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசன் நாக்கு அறுக்கப்படும் என பேசி புது சர்ச்சையை உருவாக்கினார்.

ரஜினி, நாசர் போன்ற திரையுலகத்தினர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். விவேக் ஓபராய் கமலைக் கண்டித்துள்ளார். ஒவைசி ஆதரித்துள்ளார். இப்படி பல சம்பவங்கள் இரண்டு நாளாக நடந்து வரும் நிலையில் கமல் இதுவரை வாய் திறக்கவில்லை.

தனது பேச்சு குறித்து விளக்கம் அளிக்க நல்வாய்ப்பாக இருந்த அரவக்குறிச்சி பிரச்சாரத்துக்கு கமலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இன்று ஓட்டப்பிடாரம் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டார்.

திருப்பரங்குன்றத்தில் நாளை திட்டமிட்டபடி கமல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருப்பரங்குன்றம் தோப்பூரில் நாளை மாலை 4 மணிக்கு கமல்ஹாசன் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் பேசிய சர்ச்சைப் பேச்சால் 2 நாட்கள் பேச முடியாமல் முடங்கும் நிலை கமலுக்கு ஏற்பட்டுள்ளது.   

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close