[X] Close

ரம்ஜான் நோன்புக்காக தேவை அதிகரித்ததால் பன்னீர் திராட்சையின் விலை உயர்ந்தது: கம்பம் விவசாயிகள் மகிழ்ச்சி


  • kamadenu
  • Posted: 14 May, 2019 16:12 pm
  • அ+ அ-

-என்.கணேஷ்ராஜ்

தர்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்ட பல பழங்களின் வரத்து குறைந்ததாலும், ரம்ஜான் நோன்புக்கான தேவை அதிகரித்துள்ளதாலும் பன்னீர் திராட்சையின் விலை உயர்ந்துள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அளவில் பன்னீர் திராட்சை விளைச்சலில் கம்பம் பள்ளத்தாக்கு முதல் நிலையில் உள்ளது. மாநிலத்தின் எழுபது சதவீத தேவை இப்பகுதியில் இருந்தே பூர்த்தி செய்யப்படுகிறது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்து நடுவில் பள்ளத்தாக்கு போல காணப்படுவதால் ஆண்டு முழுவதும் இப்பகுதியின் பருவநிலை இதமாக உள்ளது.

மேலும் முல்லைப்பெரியாறு, சுருளியாறு, சண்முகநதி உள்ளிட்டவற்றின் மூலம் நீர் தேவை நிறைவாக இருப்பதால் விளைச்சலும் அமோகமாக இருக்கிறது.

கருப்பு திராட்சையைப் பொறுத்த அளவில் காமயகவுண்டன்பட்டி, ஓடைப்பட்டி, சுருளிப்பட்டி, கூடலூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பழத்தின் நிறம் வெளிறிக் காணப்படுகிறது. இதனால் இவை இரண்டாம் தரமாக மதிப்பீடு செய்யப்பட்டு விலை குறைவாக விற்பனையானது.

இம்மாதத்தைப் பொறுத்த அளவில் பழ விளைச்சல் குறைவாக உள்ளது. இருப்பினும் விலை சற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காரணம், மே மாதம் முதல் தர்பூசணி, ஆரஞ்சு, ஆப்பிள், வெளிமாநில விதையில்லா பச்சை திராட்சை உள்ளிட்ட பல்வேறு பழங்களின் வரத்து குறைந்துவிட்டது. மேலும் ரம்ஜான் நோன்பு தொடங்கியதால் பன்னீர் திராட்சையின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.

எனவே, தற்போது இதன் விலை ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ''செடி நட்டு 13 முதல் 14-வது மாதத்தில் மகசூல் கிடைக்கும். முன்பு ஏக்கருக்கு 10 டன் வந்தது. தற்போது விளைச்சல் குறைந்துவிட்டது. 2 ஆண்டுகளுக்கு 5 மகசூல் எடுக்கலாம். 20 ஆண்டுகள் பலன் தரும். தொடர்ந்து இப்பழங்கள் விளைந்து கொண்டே இருக்கும். கூலி, உரம், மருந்து விலை வெகுவாய் அதிகரித்துவிட்டது. இதனால் விலை கிடைத்தாலும் லாபம் குறைந்துவிடுகிறது. இடைத்தரகர் இல்லாமல் அரசு மூலம் நிரந்தர விலை நிர்ணயம் செய்தால் உதவிகரமாக இருக்கும்'' என்றனர்.

Graps 2.jpg 

சுருளிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் கூறுகையில், "அரசு அளிக்கும் பந்தல் மானியம் மிக மிக குறைவாகவே இருக்கிறது. மிகச்சிலருக்கே இது ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவற்றை அதிகரிக்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகளை தோட்ட வேலையிலும் ஈடுபடுத்த வேண்டும். விதையில்லாத திராட்சையை விட இது மருத்துவ குணம் கொண்டது. நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இவற்றை அதிக நாள் பாதுகாக்க முடியாது. குளிர்தன்மையினால் பழங்களில் பூஞ்சாணம் ஏற்படும். இதற்காக மருந்து தெளிக்கிறோம். மற்ற விளைபொருட்களை விட இதில் மருந்து தெளிப்பு குறைவாக உள்ளது" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close