[X] Close

முறையாகப் பராமரிக்காத சாலைகளால் விபத்துகள் அதிகரிப்பு: உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை


  • kamadenu
  • Posted: 14 May, 2019 14:21 pm
  • அ+ அ-

-கி.மகாராஜன்

இந்தியாவில் விபத்துகள் அதிகரிப்பதற்கு முறையாகப் பராமரிக்கப்படாத சாலைகள் காரணமாக உள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார். 

தேனியைச் சேரந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு நவீன்ராஜ் (2) என்ற மகன் உள்ளார். புஷ்பா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 2010-ல் தேனி- வீரபாண்டி சாலையில் மகன் நவீன்ராஜுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சரக்கு வேன் மோதி புஷ்பா உயிரிழந்தார். கருப்பசாமிக்கு ரூ.5.34 லட்சம் இழப்பீடு வழங்க தேனி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரித்து நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

"இந்த வழக்கில் விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு குறைவாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு தொகை நிர்ணயம் செய்வதில் வேலைக்குச் செல்லும் பெண், வீட்டிலிருக்கும் பெண் என பாகுபாடு காட்டக்கூடாது. இரு பெண்களையும் சமமாகப் பார்க்க வேண்டும்.

2 வயது சிறுவன் விபத்தில் தாயை இழந்துள்ளார். பெண்ணின் கருவில் இருந்த குழந்தையும் இறந்துள்ளது. அந்த சிசுவின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதில் ரூ.12 லட்சத்தை சிறுவன் நவீன்ராஜ் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், நீதிபதி தனது உத்தரவில், "இந்தியாவில் 1988-ல் கொண்டு வரப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரிவுகள், தற்போதைய வருவாய், பண மதிப்பு மற்றும் செலவிடும் திறனுக்கு ஏற்றவாறு இல்லை. இந்தச் சட்டத்தில் 25 ஆண்டுகளாக உரிய திருத்தம் மேற்கொள்ளப்படாதது பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைப்பதை மறுப்பதாகும்.

இந்தச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச்செல்லாமல் இருப்பது வேதனையானது. சாலைகள் முறையாக பராமரிக்கப்படாதது, சாலை விதிகள் தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாதது போன்ற காரணங்களால் விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகின்றன" என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close