[X] Close

மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை: சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து ஸ்டாலின் பேட்டி


  • kamadenu
  • Posted: 14 May, 2019 11:01 am
  • அ+ அ-

மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தனக்குத் தெரியவில்லை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், நேற்று மாலை சந்தித்துப் பேசினார். மாலை 4.25 மணிக்கு தனது இல்லத்துக்கு வந்த சந்திரசேகர ராவை ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றார். பின்னர் அவருக்கு சால்வை அணிவித்து, கருணாநிதியின் சிலையைப் பரிசாக அளித்தார்.

மாலை 5.40 வரை 75 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த சந்திப்பின்போது திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு இருவருமே செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. ஆனால், ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சந்திரசேகர ராவ், ஸ்டாலினை மூன்றாவது அணிக்கு அழைத்ததாகவும், ஸ்டாலின் சந்திரசேகர ராவை காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"சந்திரசேகர ராவ் அணிகளை உருவாக்க வரவில்லை. தமிழ்நாட்டில் பல கோயில்களில் வழிபடுவதற்காக வந்தார். அந்த அடிப்படையில் மரியாதை நிமித்தமாகச் சந்திப்பதற்காக என்னிடம் நேரம் கேட்டார். நான் நேரம் கொடுத்தேன். அதனால், வந்து சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார், அவ்வளவுதான்", என தெரிவித்தார்.

மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், அதனை 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகுதான் இறுதி செய்ய முடியும்" என தெரிவித்தார்.

இதன்பின், இந்தச் சந்திப்பு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறிய கருத்துக்குப் பதிலளித்த ஸ்டாலின், "இந்தச் சந்திப்பு தமிழிசைக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என, தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close