[X] Close

வாக்கு வங்கியை தக்க வைக்க இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் குதித்த பாஜக


  • kamadenu
  • Posted: 14 May, 2019 08:57 am
  • அ+ அ-

-கி.மகாராஜன்

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக அழைக்காத நிலையிலும் தங்களுக்குள்ள வாக்கு வங்கியை தக்க வைக்கும் நோக்கத்தில் தாமாக முன்வந்து பாஜகவினர் பிரச்சாரம் செய்கின்றனர்.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், சூலூர், அரவக் குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளில் மே 19-ல் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரச்சாரம் முடிவடைய இன்னும் 4 நாட்களே இருப்பதால் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலின்போது அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜகவினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் 4 தொகுதி இடைத் தேர்தலில் பாஜகவை அதிமுக கண்டு கொள்ளவில்லை. பிரச்சாரத்துக்கு வருமாறு பாஜக தலைவர்களை அதிமுக மேலிடத் தலைவர்கள் அழைக்கவில்லை.

பாஜகவினர் தாமாக முன் வந்து பிரச்சாரம் செய்ய முன் வந்தபோதும், அதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருப்பரங்கு ன்றத்தில் பிரச்சாரம் செய்வதற்காக டெல்லியில் இருந்து மதுரை வந்த பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, அதிமுகவினர் ஒத்துழைப்பு கொடுக்காததால் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு காரைக்குடிக்குச் சென்றார்.

இந்நிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பாஜகவின் தனிப்பட்ட வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக பாஜக தலைவர்கள் நேற்று முன்தினம் முதல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் நகர வீதிகளில் பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி பாஜக தேர்தல் பொறுப்பாளர் மகா சுசீந்திரன் ஆகியோர் தலைமையில் பாஜகவினர் வீடு வீடாகச் சென்று அதிமுக வேட் பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தனர்.

அப்போது ஸ்ரீனிவாசன் கூறு கையில், திருப்பரங்குன்றத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8 ஆயிரம் ஓட்டுகளும், கடந்த இடைத்தேர்தலில் 7 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றோம். தற்போது பாஜக வளர்ந்துள்ளது. அந்த வாக்குகள் அனைத்தையும் கூட்டணி கட்சியான அதிமுக வேட் பாளருக்கு கிடைக்கும் என்றார்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருப் பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட நிலையூர், கைத்தறி நகர், ஹார்விப்பட்டி பூங்கா, மகாலெட்சுமி காலனியில் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அடுத்தடுத்து பாஜக மூத்த தலைவர்கள் பலர் தேர்தல் பிரச்சா ரத்துக்காக திருப்பரங்குன்றம் வரவுள்ளனர் என மகா சுசீந்திரன் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close