[X] Close

நிறுத்தியிருந்த காரில் ஏசியை இயக்கி உறங்கியவர் உயிரிழப்பு விபரீதத்தை தவிர்க்க ஆலோசனை


  • kamadenu
  • Posted: 14 May, 2019 08:47 am
  • அ+ அ-

ஈரோட்டில் நிறுத்திய காரில் ஏசி போட்டு உறங்கியவர் இறந்தது குறித்து மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த கமலாபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அனந்த கிருஷ்ணன் (44). ஈரோடு ரகுபதி நாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மனமகிழ் மன்றத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். 11-ம் தேதி மாலை ஈரோடு முத்துக்கவுண்டன் பாளையம் - பரிசல் துறை சாலையில், காரில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

அவரது நண்பர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், தனது நண்பரின் காரில் திருச்சி செல்வதற்காக அனந்தகிருஷ்ணன் திட்ட மிட்டுள்ளார். அதற்காக காரினைப் பெற்ற அவர், அசதி காரணமாக காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு ஏசியை இயக்கி விட்டு, பின் இருக்கையில் அமர்ந்து தூங்கியுள்ளார். அப்போது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

தவிர்க்க என்ன வழி?

வாகனத்தை நிறுத்தி வைத்து ஏசி போட்டு உறங்குவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து தனியார் ஆட்டோமொபைல் நிறுவன நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

கார் இன்ஜின் இயக்கத்தில் இருக்கும்போது, வரும் புகையில் கார்பன் மோனாக்ஸைடு வெளியேறும். அவ்வாறு வெளியேறும் கார்பன் மோனாக்ஸைடு, காரின் அடிப்பகுதி வழியாக காரினுள் வர வாய்ப்புள்ளது. காருக்குள் வரும் கார்பன் மோனாக்ஸைடை சுவாசித்தால், ரத்தத்தில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜன் குறைவாகக் கிடைத்து, மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அது உயிரிழப்பிற்கும் காரணமாக அமைந்து விடும்.

காரினுள் ஏசி போட்டு தூங்க நேர்ந்தால், வெளிக்காற்று சற்று உள்ளே வரும் வகையில் கண்ணாடியை இறக்கி வைக்க வேண்டும். வெளிக்காற்று உள்ளே வரும்போது, கார்பன் மோனாக்ஸைடு மூலம் ஏற்படும் நச்சு பாதிப்பு குறையும். மேலும், நிறுத்தப்பட்ட நிலையில் உள்ள காரில் ஏசி பயன்படுத்தும்போது, ‘ரீ சர்குலேசன் மோடில்’ வைப்பதைத் தவிர்க்க வேண்டும், என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close