[X] Close
 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: காவல் நிலையாணையை மீறிய போலீஸார் - உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு


sterlite-issue-ban-sterlite-sterlite-protest

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது தூத்துக்குடியில் குவிக்கப்பட்ட போலீஸார் | கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 26 May, 2018 15:33 pm
  • அ+ அ-

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்துவது தொடர்பான காவல் நிலையாணையை மீறி போலீஸார் செயல்பட்டுள்ளனர் என வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தென் மண்டல ஐஜி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக கதிரேசன், கே.கே.ரமேஷ், வழக்கறிஞர்கள் எஸ்.முத்துக்குமார், ரஜினி, எழிலரசு, சையது அப்துல்காதர், கனிமொழி, ராஜ்குமார் மற்றும் கோவில்பட்டி அழகர்சாமி, பனிமலர் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் வழக்குகளை தாக்கல் செய்தனர்.

இவை அனைத்தும் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், பாஸ்கர் மதுரம் வாதிடுகையில், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்களை பனிமய மாதா ஆலயத்தில் வைத்தே கைது செய்திருக்க வேண்டும்.

ஆனால் பொதுமக்களை ஏழரை கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக செல்ல அனுமதித்துள்ளனர். இந்த தூரத்தில் எந்த வன்முறையும் நடைபெறவில்லை. பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் செல்வதற்கு முன்பே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனங்களுக்கு போலீஸார் தீ வைத்துள்ளனர். பின்னர் அதை காரணமாக வைத்து போராட்டத்தை 99 நாட்கள் முன்னெடுத்தவர்களை அடையாளம் கண்டு சுட்டுக்கொலை செய்துள்ளனர், துப்பாக்கி சூடு நடத்தியதில் போலீஸ் நிலையாணையை மீறி செயல்பட்டுள்ளனர் என்றனர்.

வழக்கறிஞர் ரஜினி வாதிடுகையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 20 உடல்கள் உள்ளன. சில உடல்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மாவட்ட நீதிபதியை அனுப்பி அரசு மருத்துவமனையில் எத்தனை உடல்கள் உள்ளன, பாளையங்கோட்டைக்கு எத்தனை உடல்கள் மாற்றப்பட்டன என்பதை கண்டறிய வேண்டும். ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தகுமார் வாதிடுகையில், காயமடைந்தவர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுகிறது. முதலுதவி சிகிச்சை மட்டுமே அளித்துள்ளனர். அவர்களை பார்க்க உறவினர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. 144 தடை உத்தரவால் ரத்த தானம் செய்யக்கூட முடியவில்லை. இதனால் காயமடைந்தவர்களை பிற மாவட்ட அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில் சேர்த்து அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.

வழக்கறிஞர் எழிலரசு வாதிடுகையில், ‘இணையதள சேவை முடக்கத்தால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 70 சதவீத பணப்பரிமாற்றம் இணையதளம் வழியாக நடைபெறுகிறது. அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது. போலீஸார் மின்சாரத்தை துண்டித்துவிட்டு இரவில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை தாக்குகின்றனர். இளைஞர்களை கைது செய்து வருகின்றனர் என்றார்.

வழக்கறிஞர் ராஜாகார்த்திக்கேயன் வாதிடுகையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அதிகளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களின் குறைகள் தீர்க்கப்படாதது தான் இதற்கு காரணம். ஆட்சியர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் நியமனம், பணிக்காலம், இடமாறுதல் தொடர்பாக புதிய சட்டவிதிகளை உருவாக்க வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் விசாரணையை தொடங்கும் முன்பு காவல் ஆய்வாளர்கள் முதல் டிஐஜி வரையும், துணை வட்டாட்சியர் முதல் மாவட்ட வருவாய் அலுவலர் வரையும் இடமாறுதல் செய்ய வேண்டும். இவர்கள் பணியில் இருந்தால் ஆவணங்களை அழிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்றார்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன. 

- கி.மகாராஜன்

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close