[X] Close
 

நியூட்ரினோ ஆய்வு மையம் பொட்டிப்புரத்தில் அமைவது உறுதி: திட்ட இயக்குநர் விவேக் தத்தார் திட்டவட்டம்


neutrino-center

மதுரை வடபழஞ்சியில் உள்ள மாதிரி நியூட்ரினோ ஆய்வு மையத்தை பார்வையிட்ட நியூட்ரினோ திட்ட இயக்குநர் விவேக் தத்தார் (இடது ) படம்: எஸ்.ஜேம்ஸ்

  • kamadenu
  • Posted: 25 May, 2018 12:17 pm
  • அ+ அ-

மதுரை தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரத்தில் அமைய உள்ள நியூட்ரினோ திட்டம் வேறு இடத்துக்கு மாற்றும் எண்ணம் இல்லை என்று நியூட்ரினோ திட்ட இயக்குநர் விவேக் தத்தார் தெரிவித்தார். 

தேனி மாவட்டம், பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் ரூ.1,500 கோடி மதிப்பில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அண்மையில் அனுமதி வழங்கியது. இதற்கு தமிழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தேனி மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இருந்து தேனி வரை நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணம் மேற்கொண்டார். பொட்டிபுரத்தில் பல்வேறு இயக்கங்கள், பொதுமக்கள் சார்பில் போராட்டங்கள் நடந்தன.

இந்நிலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு எதிரே வடபழஞ்சியில் அமைந்துள்ள மாதிரி நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு, திட்ட இயக்குநர் விவேக் தத்தார் நேற்று திடீரென வந்தார். அங்குள்ள விஞ்ஞானிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதுகுறித்து நியூட்ரினோ திட்ட இயக்குநர் விவேக் தத்தார் கூறியதாவது: 

வடபழஞ்சியில் உள்ள உயர் ஆற்றல் இயற்பியல் ஆய்வு மையத்தில், தேனியில் அமையக்கூடிய நியூட்ரினோ மையத்தைப் போன்ற ஒரு மாதிரி நியூட்ரினோ அறிவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. 

10 அடுக்குகள் கொண்ட சென்சார் வைத்து இந்த மாதிரி நியூட்ரினோ ஆய்வு மையத்தை வடிவமைத்து வருகிறோம். தற்போது வரை 8 அடுக்குகள் வைத்து நியூட்ரினோ துகள்களுடைய செயல், பரிமானங்களை ஆய்வு செய்கிறோம். இன்னும் ஒரு வாரத்தில் இந்த மாதிரி நியூட்ரினோ ஆய்வு மையம் செயல்பட ஆரம்பித்துவிடும்.

தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைத்துள்ள நிலையில், விரைவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதிக்காக விண்ணப்பிக்க உள்ளோம். அடுத்து வனத்துறையிடம் இருந்து அனுமதி பெற வேண்டியுள்ளது.

பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ மையம் அமைப்பதற்கு எதிர்ப்புகள் ஏற்படுவதால் வேறு இடங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெறுவதாக வதந்தி பரவுகிறது. பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கவே முயற்சி செய்கிறோம். அதற்கான வேலைகள் தற்போது நடக்கிறது. விரைவில் இப்பணிகள் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close