[X] Close

நிபா வைரஸ் பீதியால் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல அச்சம்: தமிழக சுற்றுலாத்தலங்களில் குவியும் பயணிகள்


nipah-virus-scares-tourists

ஈரோடு கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் | கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 25 May, 2018 12:14 pm
  • அ+ அ-

கேரளாவில் நிபா வைரஸ் பீதியால் அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு கோடை சுற்றுலா செல்ல அச்சமடைந்துள்ள வடமாநில சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடந்த சில நாட்களாக தமிழக சுற்றுலாத் தலங்களுக்கு அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளனர்.

கேரளா மாநிலம், இந்திய சுற்றுலாவின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. பசுமைப்போர்த்திய இயற்கை, நேர்த்தியான, சுத்தமான கடற்கரைகள், அதன் கரையோரங்களில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மரங்கள், ஏரிகளில் மிதக்கும் படகு வீடுகள், கலைநயமிக்க கோயில்கள், ஆர்ப்பரிக்கும் அருவிகள் என்று இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை கேரளாவை தவிர உலகில் வேறெங்கும் பார்த்திட முடியாது. 

குறிப்பாக மூணாறு, தேக்கடி, இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழா போன்ற சுற்றுலா நகரங்களை ரசிக்கவும், ஓய்வெடுக்கவும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஆண்டு முழுவதும் குவிவார்கள். இந்த ஆண்டு கோடை சுற்றுலா கேரளாவில் வழக்கம்போல களை கட்டியது. அதற்கு நேர்மாறாக தமிழகத்தில் இந்த ஆண்டு கொளுத்திய வெயில், பருவமழை ஏமாற்றம் போன்ற வழக்கத்திற்கு மாறான தட்பவெப்பத்தால் கோடை சுற்றுலா பொலிவிழந்தது. 

நிபா வைரஸ் பீதி

இந்நிலையில், நிபா வைரஸ் காய்ச்சலுக்கு கேரளாவில் 15-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தற்போது கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருவோரை எல்லையோர செக்ஃபோஸ்ட்களிலே தமிழக சுகாதாரத்துறையினர் கண்காணித்து பரிசோதனை செய்கின்றனர். கேரளாவில் பரவும் நிபா வைரஸ் பீதியால் அந்த மாநிலத்திற்கு வியாபாரம், சுற்றுலா நிமித்தமாக செல்வோர் எண்ணிக்கை தற் போது குறைந்துள்ளது. 

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் போன்ற தென் மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு வேலை ரீதியாக அதிகமானோர் சென்று வருகின்றனர். 

தற்போது அவர்கள் நிபா வைரஸ் காய்ச்சல் பீதியால் தமிழகத்துக்கு திரும்பி வருகின்றனர். அதுபோல, கேரளாவுக்கு கோடை சுற்றுலா சென்றவர்கள், தமிழகத்திற்கு வரத்தொடங்கி யுள்ளனர்.

தேனி, தென்காசி, நாகர்கோவில் உள்பட தமிழக எல்லையோர நகரங்களில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டு கோடை சுற்றுலா புறப்பட்ட வடமாநில, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தற்போது தமிழக சுற்றுலாத்தலங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். அதனால், மதுரை, தேனி, கன்னியாகுமரி, ராமேசுவரம், கொடைக்கானல், பழனி போன்ற சுற்றுலா தலங்களில் சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

இதுகுறித்து மதுரை மாவட்ட சுற்றுலா அதிகாரி ஸ்ரீ பாலமுருகன் கூறியதாவது: ‘‘பொதுவாகவே கோடை சுற்றுலா மதுரை மாவட்டத்தில் சிறப்பாக இருக்கும். கோடையில் மதுரை சித்திரைத் திருவிழா நடப்பதால் இந்த விழாவைப் பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகள் அப்படியே இங்குள்ள சுற்றுலாத்தலங்களையும் ஒரு சுற்று பார்த்து செல்கின்றனர். இந்த ஆண்டு கோடை சுற்றுலாவில் வழக்கத்திற்கு மாறாக கடந்த ஆண்டை விட சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது, ’’ என்றார்.

- ஒய். ஆண்டனி செல்வராஜ்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close