[X] Close

நடிக்காதே... குண்டடிபட்டுக் கிடந்த இளைஞரை மிரட்டிய போலீஸார்: வைரலாகும் வீடியோ


stop-acting-cop-told-wounded-sterlite-protester-who-died-in-hospital

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 May, 2018 11:39 am
  • அ+ அ-

தூத்துக்குடியில் குண்டடி பட்டுக்கிடந்த இளைஞர் ஒருவரை சுற்றிநின்ற போலீஸார் "நடிக்காதே" எனக் கூறி மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நேற்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் பரிதாபமாக பலியானார். போலீஸாரை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை வீசி எறிந்ததாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த இளைஞரை சுற்றி நின்று பார்த்த போலீஸ்காரர்கள் சிலர் "நடிக்காதே எழுந்து ஓடு.." என்று கூறுவதும் சிலர் "அவன் நடிக்கிறான்" என்று சொல்வதும் வீடியோ பதிவாக வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி உள்ளூர் செய்தியாளர் ஒருவர் எடுத்த அந்த வீடியோ காவல்துறையினரின் அலட்சியத்தைக் காட்டுவதாக அமைந்திருப்பதாக பொதுமக்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
காளியப்பனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவுக்கு, இறந்து கிடந்த இளைஞரைக்கூட போலீஸார் மிரட்டுகின்றனே என்ற அதிருப்தி கருத்துக்களை அதிகரித்துள்ளது.

பலி அதிகரிப்பு:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100-வது நாளை எட்டியதை தொடர்ந்து நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீ ஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். 19 போலீஸார் உள்ளிட்ட 83 பேர் காயமடைந்தனர்.
கலவரத்தில் காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் கார்த்திக் (20), நேற்று முன்தினம் இரவில் உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 10 ஆனது.
இந்நிலையில், நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் இறந்தார். இத்துடன் தூத்துக்குடி உயிரிழப்பு 11 ஆக அதிகரித்துள்ளது.

 https://twitter.com/twitter/statuses/999258825583607809

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close