[X] Close

எஸ்எஸ்எல்சி தேர்வில் குழந்தைத் தொழிலாளிகள் சாதனை


sslc-exam-child-labor-students

எஸ்எஸ்எல்சி தேர்வில் வென்ற முன்னாள் குழந்தைத் தொழிலாளர்கள், இனிப்பு வழங்கிப் பாராட்டப்படுகின்றனர் | படம்: ஜெ.மனோகரன்

  • kamadenu
  • Posted: 24 May, 2018 11:24 am
  • அ+ அ-

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த குழந்தைத் தொழிலாளி, எஸ்எஸ்எல்சி தேர்வில் 427 மதிப்பெண் பெற்றுள்ளார். வருங்காலத்தில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று உயர் அதிகாரியாகி, குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகாமல் தடுப்பதே தனது லட்சியம் என்கிறார்.

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கோவை மாவட்டத்தில் செயல்படும் தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டம் சார்பில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய 22 பேரில், 21 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில், கோவை சுகுணாபுரத்தைச் சேர்ந்த வி.நவீன் 500-க்கு 427 மதிப்பெண் பெற்றுள்ளார். இவரது தந்தை வெள்ளியங்கிரி, கூலித் தொழிலாளி. வறுமை காரணமாக மூன்றாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி நவீன், ஆடு மேய்க்கும் தொழிலுக்குச் சென்றுவிட்டார். இவரை மீட்ட குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள், சிறப்புப் பள்ளியில் சேர்த்தனர். 5-ம் வகுப்புக்குப் பிறகு அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற நவீன், 427 மதிப்பெண் பெற்று எஸ்எஸ்எல்சி தேர்ச்சியடைந்துள்ளார்.

இவர் தமிழில் 86, ஆங்கிலத்தில் 65, கணிதத்தில் 90, அறிவியலில் 98, சமூக அறிவியலில் 88 மதிப்பெண் பெற்றுள்ளார். ‘இன்னும் அதிக மதிப்பெண் எதிர்பார்த்தேன். ஆங்கிலப் பாடத்தில் மதிப்பெண் குறைந்துவிட்டது. பிளஸ் 1 வகுப்பில் பொருளாதாரம் படிப்பேன். எதிர்காலத்தில் சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றி பெற்று, உயர் அதிகாரியாகி, என்னைப்போல யாரும் குழந்தைத் தொழிலாளியாகிவிடாமல் தடுப்பதே தனது லட்சியம்' என்று உறுதியுடன் கூறுகிறார் நவீன்.

மகேந்திரன்

மதுரை மாட்டுத்தாவணி பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் எஸ்.மகேந்திரன். குடும்பச் சூழலால் 2-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய மகேந்திரன், கோவை ஜவுளி நிறுவனத்தில் நூல் பிரிக்கும் வேலைக்குச் சென்றுள்ளார். பின்னர் மீட்கப்பட்ட இவர், 3-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆரம்பக் கல்விக்குப் பின்னர், சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து, தற்போது 411 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். 'பிளஸ் 1-ல் இயற்பியல் கணிதம் படித்து, வருங்காலத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயராவதே விருப்பம்' என்கிறார் மாணவர் மகேந்திரன்.

மீனா

ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். வறுமையால் ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் கல் உடைக்கும் வேலைக்குச் சென்ற கோபால், குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றுள்ளார். இவரது மகள் ஜி.மீனா, ஆந்திர மாநிலத்தில் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் அனைவரும் திருப்பூர் திரும்பியுள்ளனர். அங்கு பனியன் நிறுவனத்தில் மீனா வேலைக்குச் சென்றுள்ளார். அவரை மீட்ட குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்ட அலுவலர்கள், பூலுவப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தனர். மாணவி மீனா எஸ்எஸ்எல்சி தேர்வில் 408 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதுகுறித்து தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் கூறும்போது, 'கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். 

மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் முதலில் சிறப்புப் பள்ளிகளிலும், பின்னர் முறைசார்ந்த பள்ளிகளிலும் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் தொடர்ந்து கல்வி பயில்கிறார்களா என்பதையும் கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு உயர் கல்விக்கான ஆலோசனை வழங்குவதுடன், பல்வேறு உதவிகளையும் செய்கிறோம். இவர்களில் பலர் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளது பாராட்டுக்குரியது' என்றார்.

- ஆர்.கிருஷ்ணகுமார்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close