[X] Close

தூத்துக்குடியில் கலவரச் சூழலை கணிக்க தவறிய உளவுத்துறை:  கோட்டை விட்டது எப்படி?


sterlite-issue-ban-sterlite-sterlite-protest

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்ட போலீஸாரின் வாகனம். | படம்: ஏ. ஷேக் முகைதீன்

  • kamadenu
  • Posted: 24 May, 2018 11:02 am
  • அ+ அ-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிவரும் மக்கள் நூறாவது நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவது தெரிந்தும், அதை முன்கூட்டியே தடுக்க உளவுத்துறை தவறிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 1994-ம் ஆண்டில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடங்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் அனுமதி மறுத்த நிலையில், தூத்துக்குடியில் ஆலை நிறுவப்பட்டது. ஆலையில் உற்பத்தி செய்யப்படும் தாமிரப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு துறைமுகப் பகுதி ஏற்ற இடமாக இருந்ததால், ஸ்டெர்லைட் ஆலை தனது உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்தது. 

ஆரம்பத்தில் ஆலையை சுற்றிலும் ஒருசில கிராமங்கள் மட்டும் இருந்ததால், ஆலைக் கழிவுகளின் பாதிப்பை மக்களால் ஓரளவுக்கு மேல் உணர முடியவில்லை. அடுத்தடுத்து ஆலையை சுற்றிலும் மேலும், பல குடியிருப்புகள் உருவாகின. அதன்பிறகே ஆலையின் கழிவு பாதிப்புகள் மக்களை பாதித்தது. 

புற்றுநோய், மலட்டுத் தன்மை, குழந்தைகளுக்கு பல்வேறு தொற்று நோய் பாதிப்புகளை ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து புகார் கொடுக்கத் தொடங்கினர். இதையடுத்து பல்வேறு அமைப்புகளும் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்தனர். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்ட மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினாலும், ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 

இந்நிலையில்தான், ஆலையை மேலும் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்பின், ஆலைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்தன. குமரெட்டியார்புரம் கிராம மக்கள் போராட்டத்தை முதலில் முன்னெடுத்தனர். ஆலையின் பாதிப்பை உணர்ந்த மேலும், 18 கிராமத்தினர் போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து 99 நாட்களாக போராடியும் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. 100-வது நாளை இலக்கு நிர்ணயித்து தூத்துக்குடி ஆட்சியரை சந்தித்து, கோரிக்கை மனு கொடுக்க போராட்டக்காரர்கள் திட்டமிட்டனர்.

இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அதையும் பொருட்படுத்தாமல் ஆலையை மூடுவதே நோக்கம் என்ற அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை இடையில் போலீஸார் நிறுத்தினர். அவர்கள் கலைந்துபோக மறுத்து ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து சேதப்படுத்தினர். போலீஸார் எச்சரித்தும் போராட்டக்காரர்கள் கலைய மறுத்தனர். அதையடுத்து தடியடி நடத்தியதால் கலவரம் வெடித்தது. துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் வரை பலியாகினர்.

ஆலைக்கு எதிராக 99 நாட்கள் மக்களின் அமைதி வழி போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகமோ, தமிழக அரசோ செவிசாய்க்காத சூழலில்தான் வேறு வழியின்றி இறுதியாக தூத்துக்குடி ஆட்சியரை சந்திக்க மக்கள் முடிவெடுத்ததாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். போராட்டத்தின் தீவிரம் பற்றி உளவுத்துறை, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு முன்கூட்டியே சரியான தகவல் கொடுத்திருக்கலாம். அதற்கேற்ப அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்கூட்டியே தமிழக அரசிடம் நிலைமையை எடுத்துக் கூறி போராட்டத்தின் தீவிரத்தை குறைத்திருக்கலாம். 

இதில் மாவட்ட நிர்வாகம், மற்றும் உளவுத்துறை, தென்மண்டல ஐஜி, நெல்லை டிஐஜி, தூத்துக்குடி எஸ்பி ஆகியோர் கோட்டை விட்டார்களா என்ற கேள்வியும் எழுகிறது. 144 தடை மூலம் ஸ்டெர்லைட்-க்கு எதிராக அறவழியில் போராடிய மக்களை ஒடுக்க மாவட்ட நிர்வாகமும், போலீஸும் இணைந்து நடத்திய வெறியாட்டமே இச்சம்பவத்துக்கு காரணம் என, தூத்துக்குடி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியது:

ஸ்டெர்லைட் போராட்டத்தை அரசு நினைத்திருந்தால் முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். 100-வது நாள் என, இலக்கு நிர்ணயித்தபோதே சில அமைப்புகளே தூண்டி விடுகிறது என உணர்ந்திருக்க வேண்டும். பொதுவாக உளவுத்துறையினர் ஒவ்வொரு ஊரிலும் சமுதாய, அமைப்பு ரீதியில் ஒருவரை இன்பார்மராக (உளவு சொல்பவர்) வைத்திருப்போம். கூட்டம் எங்கே, எப்போது நடக்கிறது என்பதை மட்டுமே அவர்கள் தெரிவிப்பர். ஆனால், கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது என்பதை தெரிவிக்க மாட்டார்கள்.

இந்த இடத்தில்தான் உளவுத்துறை கோட்டை விடும். இதேநிலைதான் தூத்துக்குடி போராட்டக் களத்திலும் நேர்ந்திருக்கலாம். இந்தியா அளவில் ஒரு தலைமையை மையமாக வைத்து தமிழகம் உட்பட சில இடங்களில் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. இதன்படியே, தூத்துக்குடியிலும் சில சமூக விரோத அமைப்புகள் ஊடுருவி கலவரத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

இதுபோன்ற அமைப்புகள் தங்களை அடையாளப்படுத்தாமல் போராட்டத்தில் ஊடுருவி வழிகாட்டும். இது மக்களுக்கு தெரியாது. இதற்கு உதாரணம் ஜல்லிக்கட்டு போராட்டம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் அரசும், உளவுத் துறையும் தோல்வி அடைந்துவிட்டது என்றே சொல்லலாம். நூறாவது நாளில் கிராம மக்கள் திரளப் போகின்றனர் என்ற தகவல் முன்கூட்டியே தெரிந்தபோதிலும் அதற்கு ஏற்ப போலீஸார் எண்ணிக்கையை அதிகரித்து, கிராமங்களில் இருந்து கிளம்பும்போதே அவர்களை தடுத்திருக்கலாம். 144 தடை உத்தரவு இருப்பதால் யாரும் வரமாட்டார்கள் என மெத்தனமாக இருந்து விட்டனர். 

வீணடிக்கப்படும் போலீஸாரின் ஆற்றல்

முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் விழாக்களில் போலீஸாரை குவிக்கவேண்டும் என்ற அறிவிக்கப்படாத உத்தரவால் போலீஸாரின் ஆற்றல் முழுவதும் வீணடிக்கப்படுகிறது. ஆளுங்கட்சியில் இருந்து பிரிந்துசென்ற ஒருவர், அவரது உறவினரை கண்காணித்து தகவல் சொல்வதை மட்டுமே உளவுத்துறை பிரதானமாகக் கருதுகிறதே தவிர, தூத்துக்குடி சம்பவம் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை. தமிழக டிஜிபி மீது ஏற்கெனவே குட்கா ஊழல் விவகாரம் இருக்கும்போது, உளவுத் துறை உயர் அதிகாரிகள் பதவியை தக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதால் தூத்துக்குடி கலவரம் போன்ற சம்பவங்களை தவிர்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டங்களை கையில் எடுக்கும் அமைப்புகள்

மேலும், அந்த அதிகாரி கூறும்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலையை மூடினாலும், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கையில் எடுத்துக்கொண்டு போராடும் ஒரு குரூப் உருவாகும். இது போன்ற நிலையால் போராட்டம் என்ற பெயரில் அப்பாவி மக்கள் இறுதியில் பாதிக்கப்படுகின்றனர். அரசும், உளவுத்துறையும்தான் விழிப்புடன் இருக்கவேண்டும். அனுமதியின்றி செயல்படும் சமூக விரோத அமைப்புகளுக்கு தடை ஏற்படுத்த வேண்டும். உளவுத்துறை, காவல்துறைக்கும் வழங்கும் சுதந்திரத்தை அரசும் கொடுக்க வேண்டும், என்றார்.

-என். சன்னாசி

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close