[X] Close

சுவாரஸ்யம்: உணவை மட்டுமல்ல அது பரிமாறப்படும் தட்டையும் சாப்பிடலாம்..


now-finish-the-food-and-the-plate

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 May, 2018 10:55 am
  • அ+ அ-

எனக்கு சாப்பிடப் பிடிக்கும் ஆனால் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்தான் சோம்பேறித்தனம் என்பவர்கள் பலாப்பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த புதுவகைத் தட்டை பயன்படுத்தலாம். காரணம் உணவை உண்ட கையுடன் உணவு பரிமாறப்பட்ட தட்டையும் சாப்பிட்டுவிடலாம்.

அடடே என்கிறீர்களா! ஆமாம். இது நிச்சயம் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்தான். தஞ்சாவூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஐஐஎஃப்பிடி உணவு பதப்படுத்துதல் நிறுவனமானது பலாப்பழத் தோலைக் கொண்டு தட்டைத் தயாரித்துள்ளது. வழக்கமாக பழத்தை எடுத்துவிட்டு இந்த தோலை எறிந்துவிடுவோம். ஆனால், அவ்வாறு தூக்கி எறியப்படும் தோல் மற்றும் பலாப்பழத் தண்டைக் கொண்டு இந்த வகை தட்டைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது ஐஐஎஃப்பிடி.

எப்படி இந்த யோசனை தோன்றியது?
இது குறித்து ஐஐஎஃப்பிடி-யின் இயக்குநர் சி.அனந்தராமகிருஷ்ணன் கூறும்போது, "நாங்கள் சிறுதானியத்தைக் கொண்டு ஐஸ்க்ரீம் தயாரித்தோம். அந்த ஐஸ்க்ரீமுக்கு உணவு தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடந்த கிருஷி உன்னாட்டி மேலாவில் இதை காட்சிப் படுத்தினோம். ஐஸ்க்ரீம் வெகு ருசியாக இருப்பதாக பாராட்டுகள் குவிந்தது. ஆனாலும், எங்களுக்கு ஒரு குறை இருந்தது. அந்த பிரத்யேக சிறுதானிய ஐஸ்க்ரீமை தாங்கிப்பிடிக்க கொஞ்சம் வலுவான கோன் வேண்டும் என நினைத்தோம். அதற்கானத் தேடலைத் தொடங்கினோம்.
அப்போதுதான், பலாப்பழ செதிலையும் அதன் நடுத்தண்டையும் பயன்படுத்தும் யோசனை பிறந்தது. அதன்படி தயாரித்தோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்தது. ஆட்டா, கார்ன் மாவு போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் சாதாரண கோன்களைவிட பலாப்பழ செதிலில் இருந்து தயாரிக்கப்பட்ட கோன் அதிக நார்ச்சத்து நிறைந்ததாக இருந்தது. அடர்த்தியாகவும் இருந்தது" என்றார்.

கோனில் இருந்து பிறந்த தட்டு..
அவர் மேலும் கூறும்போது "பலாப்பழ செதிலில் இருந்து செய்யப்பட்ட கோன் நன்றாக அமைந்ததால் அதனைக் கொண்டே தட்டை செய்ய முயன்றோம். சேலட் வகைகளை இவ்வகை தட்டுகளில் வைத்துப் பரிமாறலாம். இந்த வகை தட்டுகளில் 6.9% புரதமும் 12.9% நார்ச்சத்தும் இருப்பதால் இந்த வகை தட்டுகள் உண்பதற்கு உகந்தது. ஒரு கிலோ பலாப்பழத்தில் 300 கிராம் அளவு பழம் இருக்கும். அதை நாம் எடுத்துவிட்டு மிச்சத்தை எறிந்துவிடுகிறோம். ஆனால், இப்போது நாங்கள் வேஸ்ட்டை டேஸ்ட்டாக மாற்றியிருக்கிறோம்" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close