[X] Close
 

நிபா வைரஸ் நோயாளிகள் கண்காணிப்பு: தென் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர தனி வார்டுகள்


nipah-virus-watch

தேனி மாவட்டம், கம்பம் மெட்டில் கேரளா - தமிழக எல்லையில் வாகனங்களில் வருவோரை விசாரிக்கும் சுகாதாரத்துறையினர்

  • kamadenu
  • Posted: 23 May, 2018 11:13 am
  • அ+ அ-

கேரளாவை பதற வைத்துள்ள நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்துக்கு பரவுவதை தடுக்க, இரு மாநில எல்லையோரப் பகுதிகளில் கேரளாவில் இருந்துவரும் வாகனங்களை கண்காணித்து காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நோயாளிகளை சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்து தமிழக எல்லைக்குள் அனுமதிக்கின்றனர். 

பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சலைத் தொடர்ந்து, தற்போது நிபா வைரஸ் காய்ச்சல் கேரளாவை அச்சுறுத்தி வருகிறது. இந்தக் காய்ச்சலுக்கு கேரளாவில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி போன்ற தென் மாவட்டங்கள், கேரளாவுக்கு மிக அருகில் இருப்பதால் தமிழகத்திலும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் இருக்கிறது.

அதனால், தமிழக - கேரளா எல்லையில் அமைந்துள்ள தென் மாவட்டங்களில் சுகாதாரத் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கேரளா-தமிழக எல்லையோர மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் மருத்துவ முகாம்களை அமைக்க ஏற்பாடு செய்துள்ளனர். 

சிடி அலர்ட் தகவல்கள்

கேரளாவில் இருந்து நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் யாரும் வந்தால், அவர்களுக்கு இந்த முகாம்களில் சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். 

அதற்காக தேனி அருகே கம்பம் மெட்டு, லோயர் கேம்ப் பகுதிகளில் கேரளாவில் இருந்து வாகனங்களில் வருவோரை தமிழக சுகாதாரத் துறையினர் கண்காணிக்கின்றனர். மத்திய சுகாதாரத்துறை, நிபா வைரஸ் எப்படி பரவுகிறது, அதன் அறிகுறிகள், இதுவரையிலான பாதிப்பு, தடுக்கும் வழிமுறைகள் அடங்கிய ‘சிடி அலர்ட்’(communicable diseases) தகவல்களை பிடிஎப் வடிவில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அவர்கள். இந்த சிடி அலர்ட் தகவல்களைக் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் நிபா வைரஸ் அறிகுறியுடன் நோயாளிகள் வந்தால் அவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கவும், இந்தக் காய்ச்லை தடுக்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

 


லோயர்கேம்ப்பில் கேரளா மாநிலத்தில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் சுகாதாரத்துறையினர்

தயார் நிலையில் மருத்துவக்குழு 

நிபா வைரஸ் காய்ச்சல் நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் வார்டு தயாராகி உள்ளது. நோயாளிகளுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

ஆனாலும், தனி மருத்துவக் குழுவை நியமித்து நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் நோயாளிகள் வந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் மருதுபாண்டியன் கூறியதாவது: இதுவரை நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் நோயாளிகள் சிகிச்சைக்கு வரவில்லை. 

ஆனால், வந்தால் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் 115-வது வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வார்டில் 15 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய மருத்துவக்குழு 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது ’’ என்றார். 

கண்காணிப்பு வளையத்தில் கேரளாவில் இருந்து வந்தவர்கள்

மதுரை துணை இயக்குநர் அர்ஜூன் குமார் கூறுகையில், ‘‘நிபா வைரஸ் காய்ச்சல் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். கேரளாவில் இருந்து காய்ச்சல் அறிகுறியுடன் வந்தவர்கள் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு முழு பரிசோதனை செய்து சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டால், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்கிறோம். அதுபோல், கேரளாவில் இருந்து சமீபத்தில் வந்தவர்களையும், தொடர்ந்து வருபவர்களையும் கண்காணிக்கிறோம். அதற்காகவே எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ முகாம்களை அமைத்து காய்ச்சல் அறிகுறியுடன் வாகனங்களில் வருவோரை பரிசோதிக்கிறோம், ’’ என்றார்.

- ஒய். ஆண்டனி செல்வராஜ்

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close